அமெரிக்காவையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்தியா – உலக அரசியலில் புதிய அதிகார மையம்
வெளிநாட்டு உறவுகள், பொருளாதார முடிவுகள் மற்றும் புவிசார் அரசியல் அணுகுமுறைகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா, எந்தவித ஆரவாரமுமின்றி ஒரு புதிய உலக அரசியல் சமநிலையை உருவாக்கி வருவதாக சர்வதேச பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அந்த மாற்றத்தின் பின்னணியை விளக்கும் செய்தித் தொகுப்பிது.
நீண்ட காலமாக சர்வதேச தலைமையென்பது சில நாடுகளுக்கே உரித்தான அதிகாரமாகவே கருதப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான உலக ஒழுங்கு, வெற்றி பெற்ற நாடுகளின் ஆதிக்கத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. அமெரிக்கா, சோவியத் ரஷ்யா ஆகியவை பிரதான வல்லரசுகளாகவும், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா போன்ற நாடுகள் அவற்றின் ஆதரவு சக்திகளாகவும் செயல்பட்டன.
இந்த சூழலில், இந்தியா எப்போதும் தனித்த பாதையில் பயணிக்கும் நாடாகவே இருந்து வந்தது. கடந்த நூற்றாண்டு “அமெரிக்காவின் நூற்றாண்டு” என அழைக்கப்பட்ட நிலையில், தற்போதைய காலம் “ஆசியாவின் எழுச்சி காலம்” என உலகம் வர்ணிக்கிறது. இதில் இந்தியாவே முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்ட நிலையில், உலகளாவிய தலைமைத்துவத்திற்கான வெற்றிடம் வெளிப்பட்டது.
இந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடிய நம்பகமான நாடாக, கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாடு இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று உலகத்தை முடக்கிய காலகட்டத்தில், “உலகின் மருந்துக் களஞ்சியம்” என்ற அடையாளத்துடன் இந்தியா, ‘வாக்சின் மைத்ரி’ திட்டத்தின் மூலம் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 100 நாடுகளுக்கு 70 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கி மனிதாபிமான முன்னுதாரணத்தை உருவாக்கியது.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான உலக முயற்சிகளில், பாரிஸில் நடைபெற்ற COP21 மாநாட்டின் போது இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து தொடங்கிய சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, இன்று 90-க்கும் மேற்பட்ட நாடுகளை இணைத்துள்ள ஒரு வலுவான அமைப்பாக வளர்ந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியா, “ஒரு பூமி – ஒரு குடும்பம் – ஒரு எதிர்காலம்” என்ற கருத்தியலின் கீழ் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தி உலகின் பாராட்டைப் பெற்றது. இதற்கு முன்பாகவே, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில், சுற்றியுள்ள நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி வந்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் பொருளாதார கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. குவாட் கூட்டமைப்பு எந்த ஒரு நாட்டையும் எதிரியாகக் கொண்டு செயல்படும் இராணுவ அமைப்பு அல்ல என்றும், கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி, தடுப்பூசி விநியோகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு போன்ற பொதுவான உலகச் சவால்களுக்கான கூட்டணியே என்றும் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
பயங்கரவாதத்தை எதிர்க்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், உளவுத்துறை தகவல் பகிர்வு அவசியம் என்றும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை பணிகளில், இதுவரை 49-க்கும் மேற்பட்ட பணிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தம் மற்றும் விரிவாக்கம் குறித்து இந்தியா எழுப்பும் கோரிக்கைக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட ஜி4 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் வாக்குரிமை அடிப்படையில் இந்தியா ஏழாவது பெரிய பங்குதாரராக இருந்து, உலக தெற்கின் பிரதிநிதியாக செயல்படுகிறது.
“எங்களுடன் இல்லையெனில் எதிரி” என்ற வல்லரசுகளின் பழைய அணுகுமுறையை நிராகரித்து, இந்தியா சமநிலையான, சுயமரியாதை கொண்ட வெளிநாட்டு கொள்கையை பின்பற்றி வருகிறது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக அமெரிக்கா வரி விதித்தபோதும், தேசிய நலனே முதன்மை என இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை.
வர்த்தக முடிவுகள் கருத்தியலின் அடிப்படையில் அல்ல, பொருளாதார அவசியத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன என்பதை இந்தியா தெளிவுபடுத்தியது. ரஷ்யாவுடன் பாரம்பரிய பாதுகாப்பு உறவுகளைத் தொடர்ந்துகொண்டே, iCET போன்ற ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவுடனான பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் இந்தியா வலுப்படுத்தியுள்ளது.
இன்று இந்தியா, தனக்காக மட்டுமல்லாமல், உலக தெற்கின் சார்பாக பேசும் தலைமையாக மாறியுள்ளது. யாரையும் பகைக்காமல், யாருக்கும் அடிபணியாமல் தன் கொள்கையில் உறுதியாக நிற்க முடியும் என்பதையும் நிரூபித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த தன்னிச்சையான அணுகுமுறை எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால், இந்தியா இனி வல்லரசுகளின் அழுத்தத்துக்கு ஏற்ப திசை மாறும் நாடல்ல. “வசுதைவ குடும்பகம்” – உலகமே ஒரு குடும்பம் – என்ற தத்துவத்தின் வழியில் பயணிக்கும் இந்தியா, உருவாகும் புதிய உலக ஒழுங்கின் முக்கிய தூணாக திகழ்கிறது.
மொத்தத்தில், இந்தியா உருவாக்கும் புதிய உலக அரசியல் விதிமுறைகளில், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் தலைவர்கள் அல்ல; சமநிலையான, நம்பகமான கூட்டாளிகள் மட்டுமே என்பதே தற்போதைய நிதர்சனம்.