மக்களுக்கு சேவை செய்ய அரசியல் அவசியமில்லை – சிவராஜ்குமார் கருத்து
மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், கலைஞராக இருந்து கொண்டே சமூகத்திற்கு சேவை செய்ய முடியும் என்றும் நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா இணைந்து நடித்துள்ள “45: தி மூவி” திரைப்படம் வரும் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற படத்தின் முன்னோட்ட விழாவில் சிவராஜ்குமார், உபேந்திரா, விஜய் ஆண்டனி, வின்சன்ட் அசோகன், இயக்குநர் அர்ஜுன் ஜன்யா உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் உரையாற்றிய சிவராஜ்குமார், விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தின் கன்னட மொழி மறுஆக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், சில காரணங்களால் அதனை ஏற்க முடியாமல் போனதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், சமூகத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக அரசியலுக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லை என்றும், நடிகராக இருந்து எந்த வேறுபாடுமின்றி அனைவருக்கும் உதவ முடியும் என்றும் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.