‘இந்தியாவின் தொழில்நுட்ப தன்னிறைவு’ – பிரதமர் மோடி பாராட்டு
ஆத்மநிர்பர் பாரத் முயற்சியின் ஒரு பகுதியாக, முழுமையாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட DHRUV-64 மைக்ரோ புராசஸர் சிப் செட்-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனையை இந்தியாவின் தொழில்நுட்ப தன்னிறைவு வளர்ச்சியில் ஒரு முக்கிய முன்னேற்றமாக பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
இந்தியாவை பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில், தொழில்நுட்பம், புதுமை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சுயசார்புடைய நாடாக மாற்றும் நோக்கில் மத்திய அரசு “ஆத்மநிர்பர் பாரத்” என்ற விரிவான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. வெளிநாட்டு தொழில்நுட்பங்களை சாராமல், நாட்டுக்குள்ளேயே உற்பத்தி, ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவு வளர்ச்சியை ஊக்குவிப்பதே இதன் முக்கிய இலக்காகும்.
MAKE IN INDIA, DIGITAL INDIA, STARTUP INDIA போன்ற திட்டங்களுடன் இணைந்து, சிறு-நடுத்தர தொழில்கள், ஸ்டார்ட் அப்கள், உள்ளூர் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கும் இந்தத் திட்டம் பெரும் ஆதரவை வழங்கி வருகிறது. இதன் மூலம், உலகளாவிய போட்டியில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தி, நீடித்த வளர்ச்சியுடன் கூடிய தன்னம்பிக்கையான நாடாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும்.
இந்த பின்னணியில், ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் முழுமையாக உருவாக்கப்பட்ட “DHRUV-64” என்ற புதிய தலைமுறை மைக்ரோ புராசஸர் சிப் செட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப் செட், 5G உட்கட்டமைப்பு, வாகன தொழில்நுட்பம், நுகர்வோர் மின்னணு சாதனங்கள், தொழிற்துறை தானியக்கம் மற்றும் Internet of Things (IoT) போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட உள்ளது.
மைக்ரோ புராசஸர்கள் என்பது ஸ்மார்ட்போன்கள், கணினிகள், ஸ்மார்ட் டிவிகள், வீட்டு உபகரணங்கள், வாகனங்கள், மேம்பட்ட மருத்துவ கருவிகள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட அனைத்து நவீன மின்னணு சாதனங்களின் முக்கிய கட்டுப்பாட்டு மையமாக செயல்படுகின்றன. ஒரு சிப் செட் உருவாக்கம் என்பது மிகுந்த தொழில்நுட்ப சிக்கல்களைக் கொண்டதாக இருப்பதுடன், உலகளவில் சில முன்னணி வெளிநாட்டு நிறுவனங்களின் காப்புரிமை தொழில்நுட்பங்களையே பெரும்பாலும் சார்ந்துள்ளது.
இதன் காரணமாக, இந்த சிப் செட்-கள் மிக உயர்ந்த விலையில் கிடைப்பதோடு, இந்தியாவின் சிறு நிறுவனங்களுக்கு எளிதில் அணுக முடியாதவையாக இருந்து வந்தன. சமீபத்திய தகவல்களின் படி, உலகளவில் உற்பத்தி செய்யப்படும் மைக்ரோ புராசஸர்களில் சுமார் 20 சதவீதத்தை இந்தியா பயன்படுத்தி வருகிறது.
இந்த சூழலில், இந்திய ஸ்டார்ட் அப்கள் மற்றும் சிறு-நடுத்தர மின்னணு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் C-DAC (Centre for Development of Advanced Computing) நிறுவனம், முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட DHRUV-64 சிப் செட்டை வெளியிட்டுள்ளது.
64-பிட் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட, 2 கோர் மைக்ரோ புராசஸர் கொண்ட இந்த சிப், அதிகபட்சமாக 1.0 GHz வேகத்தில் செயல்படக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு செயலிகளின் சார்பை குறைத்து, இந்தியாவில் தயாரிக்கப்படும் கணினி மற்றும் மின்னணு தயாரிப்புகளை வடிவமைக்க, சோதிக்க மற்றும் பெருமளவில் உற்பத்தி செய்ய இந்த சிப் உதவியாக இருக்கும். ஸ்டார்ட் அப்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு இந்த சிப் செட்-கள் வழங்கப்பட உள்ளன.
இதனைத் தொடர்ந்து, DHRUV-64 மைக்ரோ புராசஸரை இந்தியாவின் தொழில்நுட்ப தன்னிறைவுக்கான முக்கிய மைல்கல் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். தனது சமூக வலைதளப் பதிவில், இந்த சிப் வெளிநாட்டு தொழில்நுட்ப சார்பை குறைத்து, “ஆத்மநிர்பர் பாரத்” மற்றும் “மேக் இன் இந்தியா” கனவுகளை நனவாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளம் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களின் திறமையை இந்த முயற்சி வெளிப்படுத்துகிறது என்றும், 5G, வாகன தொழில்நுட்பம், தொழிற்துறை தானியக்கம் போன்ற எதிர்காலத் துறைகளில் இந்தியாவை உலகளாவிய முன்னணிக்கு கொண்டு செல்லும் ஆற்றல் இதற்கு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், DHRUV-64 என்பது இந்தியாவின் புதுமை, அறிவியல் முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கையின் சின்னம் எனவும் அவர் விளக்கியுள்ளார்.
இதற்கு முன்பாகவும், இந்திய அரசு மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்கள் இணைந்து பல்வேறு சிப் செட்-களை உருவாக்கி உள்ளன. 2018-ஆம் ஆண்டு IIT மெட்ராஸ் உருவாக்கிய SHAKTHI சிப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது. அதே ஆண்டில் IIT பாம்பே உருவாக்கிய AJITH சிப் தொழிற்துறை மற்றும் ரோபோட்டிக்ஸ் பயன்பாடுகளுக்காக தயாரிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ISRO மற்றும் SCL இணைந்து உருவாக்கிய VIKRAM சிப், விண்வெளியின் கடுமையான சூழ்நிலைகளை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதேபோல், C-DAC உருவாக்கிய TEJAS-64 தொழிற்துறை தானியக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய DHRUV-64 அறிமுகத்தைத் தொடர்ந்து, அடுத்த தலைமுறை DHANUSH மற்றும் DHANUSH+ செயலிகளை உருவாக்கும் பணிகளையும் C-DAC தொடங்கியுள்ளது.
இதனுடன், நாட்டுக்குள்ளேயே சிப் செட் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், Digital India RISC-V திட்டத்தின் மூலம், சிலிக்கான் வடிவமைப்பு, சோதனை மற்றும் மாதிரி தயாரிப்புகளுக்குத் தேவையான ஆதரவையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
மொத்தமாக, DHRUV-64 மைக்ரோ புராசஸர் அறிமுகம் என்பது ஒரு தொழில்நுட்ப சாதனை மட்டுமல்ல; இந்தியாவின் நீண்டகால தொழில்நுட்ப தன்னிறைவு பயணத்தில் ஒரு முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. உள்நாட்டிலேயே வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை வலுப்படுத்தும் இந்த முயற்சி, இந்திய ஸ்டார்ட் அப்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, உலகளாவிய தொழில்நுட்ப போட்டியில் இந்தியாவின் நிலையை மேலும் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.