தியானம் உலகமெங்கும் இணைக்கும் பொதுவான மனப் பயிற்சி
தியானம் என்பது மனிதர்களுக்கு உள்ளார்ந்த அமைதி, சிந்தனைத் தெளிவு மற்றும் மன உறுதிப்பாட்டை அளிக்கும் ஒரு சக்திவாய்ந்த வழிமுறை என குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21ஆம் தேதி “சர்வதேச தியான தினம்” ஆகக் கடைப்பிடிக்கப்படும் என, கடந்த 2024ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு இரண்டாவது முறையாக உலகம் முழுவதும் சர்வதேச தியான தினம் அனுசரிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச தியான நிகழ்ச்சியை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தியானம் என்பது எந்த ஒரு நாட்டுக்கோ, மதத்துக்கோ, பண்பாட்டுக்கோ மட்டும் உரியதாக இல்லாமல், எல்லைகளைத் தாண்டி மனிதகுலம் முழுவதையும் இணைக்கும் உலகளாவிய பயிற்சி எனக் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவில் தியான மரபு தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு, அடுத்த தலைமுறைகளுக்கு பரிமாறப்பட்டு வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.