வங்கதேச கலவரத்தில் பத்திரிகையாளர் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவங்கள்
வங்கதேசத்தில் உஸ்மான் மரணத்திற்கு நீதி கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது, ஒரு இந்து இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாலையில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மைமன்சிங் நகரைச் சேர்ந்த திபு சந்திர தாஸ் என்ற இளைஞர், அங்குள்ள துணி உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அவர் மத நிந்தனை செய்ததாக குற்றம்சாட்டி, ஒரு கும்பல் அவரை ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி, பின்னர் தூக்கிலிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து, கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கி உயிரிழக்கச் செய்த அந்த கும்பல், பின்னர் அவரது உடலை தீயிட்டு எரித்துள்ளது. இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு வங்கதேசத்தின் ஆளும் இடைக்கால அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, குல்னா பகுதியில் இம்தாதுல் ஹக் மிலோன் என்ற பத்திரிகையாளர், மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும், வன்முறையாளர்கள் ‘தி டெய்லி ஸ்டார்’ மற்றும் ‘புரோதம் ஆலோ’ ஆகிய இரண்டு முக்கிய பத்திரிகை அலுவலகங்களில் புகுந்து சூறையாடி, வளாகத்திற்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.