காங்கோவில் அதிர்ச்சி சம்பவம் – படிக்கட்டுகள் இல்லாததால் விமானத்திலிருந்து குதித்து இறங்கிய பயணிகள்
காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள கிண்டு விமான நிலையத்தில், அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் விமானத்திலிருந்து குதித்து தரையிறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
மணிமா மாகாணத்தில் அமைந்துள்ள கிண்டு விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது. ஆனால், விமானத்தில் இருந்து பயணிகள் இறங்குவதற்குத் தேவையான நகரும் படிக்கட்டுகள் அல்லது மாற்று வசதிகள் எந்தவிதமாகவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் நீண்ட நேரம் விமானத்திற்குள் காத்திருந்த பயணிகள், வேறு வழியின்றி விமானத்தின் நுழைவாயிலில் இருந்து நேரடியாக தரையில் குதித்து இறங்கியுள்ளனர். சிலர் பயம் கலந்த முகபாவனையுடன் கீழே இறங்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
விமான நிலைய நிர்வாகத்தின் அலட்சியத்தையே இந்த சம்பவம் வெளிப்படுத்துவதாக பலரும் விமர்சனம் எழுப்பி வருகின்றனர். அடிப்படை பாதுகாப்பு வசதிகள்கூட இல்லாத விமான நிலையங்கள் குறித்து கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.