இறந்தவர்களின் உடலை பல ஆண்டுகள் பாதுகாத்து பிறகு இறுதிச்சடங்கு: இந்தோனேசிய பழங்குடியினரின் வியப்பூட்டும் மரபு
உலகின் பல பகுதிகளில், ஒருவர் மரணமடைந்தால் உடனடியாக அடக்கம் செய்யப்படுவதோ அல்லது தகனம் செய்யப்படுவதோ வழக்கமாக உள்ளது. ஆனால் இந்தோனேசியாவில் உள்ள ஒரு பழங்குடியினர், மரணத்தை முற்றுப்புள்ளியாக அல்லாது — ஒரு புதிய பயணத்தின் தொடக்கம் என்று நம்புகின்றனர்.
இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் அமைந்துள்ள டனா டரோஜா பகுதியில் வசிக்கும் டரோஜா பழங்குடியினர், தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் உடலை உடனே அடக்கம் செய்யாமல், பதப்படுத்தி பல ஆண்டுகள் வரை வீட்டில் வைத்து பாதுகாக்கும் வினோத மரபைக் கடைபிடித்து வருகின்றனர்.
அவர்களின் நம்பிக்கையின்படி, மரணமடைந்தவர் இன்னும் “அவர்களுடன் இருப்பவர்” என்ற உணர்வோடு, அந்த உடல்களை வீட்டின் ஒரு சிறப்பிடமான ‘டாங்கோனன்’ எனப்படும் அறையில் வைக்கின்றனர்.
அங்கு அந்த உடல்களுடன் பேசுவது, உணவு படைப்பது, புதிய குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்துவது போன்ற செயல்களையும் தொடர்ந்து செய்கிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, அவர்கள் இந்த பதப்படுத்தப்பட்ட உடல்களை சுத்தம் செய்து, புதிய ஆடைகள் அணிவித்து சிறப்பு வழிபாடுகளும் நடத்துகின்றனர். இந்த நிகழ்வை “மா’னேனே” (Ma’nene) என அழைக்கின்றனர்.
பதப்படுத்தப்பட்ட உடல்கள் தலைமுடி, பற்கள் உள்ளிட்டவற்றுடன் காய்ந்த நிலையில் காணப்படும். சில குடும்பங்கள், ஒருவரது வாழ்க்கைத் துணை உயிரோடு இருக்கும் வரை அவரின் உடலை பாதுகாப்பதாகவும் கூறப்படுகிறது.
பல ஆண்டுகள் கழித்து, குடும்பத்தினர் சேமித்த பணத்திலிருந்து மிகுந்த செலவில் 5 நாட்கள் நீடிக்கும் இறுதிச்சடங்கை மிகுந்த கொண்டாட்டத்துடன் நடத்துகின்றனர்.
அந்த நிகழ்வின் போது எருமை மற்றும் பன்றிகள் பலியிடப்பட்டு, நூற்றுக்கணக்கான மக்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. இறுதியில், அந்த உடல் மரக்குடிசையில் வைத்து தகனம் செய்யப்படுகிறது.
டரோஜா மக்களுக்கு, இது ஒரு துக்க நிகழ்ச்சி அல்ல — அவர்கள் அன்புக்குரியவருடன் கடைசி முறையாக இணைந்து கொண்டாடும் புனிதமான தருணம்.