20 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் கால்தடங்கள் கண்டெடுப்பு!
இத்தாலி நாட்டில் சுமார் 20 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டைனோசர்கள் குறித்த ஆய்வுகள் உலகின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இத்தாலியில் உள்ள ஸ்டெல்வியோ தேசியப் பூங்கா பகுதியில் ஆய்வாளர்கள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த ஆய்வின்போது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள செங்குத்தான பாறை அமைப்பில், டைனோசர்கள் நடந்து சென்றதற்கான தெளிவான கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த கால்தடங்கள் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் தொடர்ச்சியாகப் பதிந்துள்ளன என்றும், சில தடங்கள் 40 சென்டிமீட்டர் அகலமுடையதாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 35 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுகளில் இத்தகைய தடங்களை இதுவரை காணவில்லை என்றும், இது மிகவும் அரிய கண்டுபிடிப்பு என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கால்தடங்கள், சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த தாவர உணவு உண்ணும் “பிளேட்டியோசாரஸ்” (Plateosaurus) வகை டைனோசருக்குச் சொந்தமானவை இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.