வங்கதேசத்தில் தீவிரமடையும் கலவரம் – நாடாளுமன்றம் நோக்கி முன்னேறிய போராட்டக்காரர்கள்
வங்கதேசத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் காரணமாக அந்நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அந்தநிலையில், கலவரத்தில் ஈடுபட்ட சிலர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றதால் பாதுகாப்பு நிலைமை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்து கலவரமாக மாறின. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட சில தீவிரவாத கும்பல்கள், ஒரு இந்து இளைஞரை கொடூரமாக தாக்கி கொலை செய்து, அவரது உடலை சாலையில் வீசி தீ வைத்து எரித்தனர்.
மேலும், செய்தி நிறுவன அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், வங்கதேசம் முழுவதும் சட்டம்–ஒழுங்கு நிலைமை முற்றிலும் சீர்குலைந்தது.
இதையடுத்து, டாக்கா நகரம் முழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இந்நிலையில், ஹாடியின் இறுதிச் சடங்கு ஊர்வலம் முடிந்த பின், நாடாளுமன்றம் முன்பாக திரண்ட வன்முறை கும்பல் உள்ளே புக முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் ராணுவத்தினர் உடனடியாக தலையிட்டு போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் கடுமைப்படுத்தியுள்ளனர்.