போயிங் 787 ட்ரீம்லைனர் விபத்து : விமானிகள் தான் காரணமா?

Date:

போயிங் 787 ட்ரீம்லைனர் விபத்து : விமானிகள் தான் காரணமா?

அகமதாபாத்தில் நிகழ்ந்த போயிங் 787 ட்ரீம்லைனர் விமான விபத்துக்கு விமானிகளைப் பொறுப்பாளர்களாக காட்டுவது மிகுந்த அவமானகரமான செயல் என, போயிங் நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரி பியர்சன் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விபத்து தொடர்பான விவரங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

கடந்த ஜூன் 12-ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 242 பயணிகளுடன் லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையில் விழுந்து தீப்பிடித்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். மேலும், விமானம் தரையில் விழுந்தபோது அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி ஏற்பட்ட தீவிபத்தில் 10-க்கும் அதிகமான மருத்துவ மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.

விமானம் போதிய உயரத்திற்கு மேலே செல்ல முடியாமல் கீழே சரிந்திருக்கலாம் என்றும், தரையிறங்கும் சக்கர அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், பறவைகள் என்ஜினில் மோதி இருக்கலாம் என்றும், என்ஜின் செயல்பாட்டில் தடங்கல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பல்வேறு காரணங்கள் ஆரம்ப கட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

இந்த விபத்து குறித்து Aircraft Accident Investigation Bureau கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில், விமானம் புறப்பட்ட சில விநாடிகளுக்குள் அதன் இரு என்ஜின்களுக்கும் செல்ல வேண்டிய எரிபொருள் விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் திடீரென “கட்-ஆஃப்” நிலைக்கு மாறியதால், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்லாமல் விமானம் விபத்தில் சிக்கியதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

இந்த அறிக்கை, விமானிகளின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என மறைமுகமாகக் குற்றம் சாட்டுவதாக அமைந்துள்ளது. இதனை கடுமையாக விமர்சித்துள்ள பியர்சன், இந்த அறிக்கை “மிகவும் கொடூரமானது” எனக் குறிப்பிட்டு, விமானிகள் மீது பழி சுமத்துவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், போயிங் நிறுவனத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் தரக் கட்டுப்பாட்டு குறைபாடுகள் மற்றும் பலவீனமான ஒழுங்குமுறை அமைப்புகளே இதுபோன்ற விபத்துகளுக்குப் பிரதான காரணமாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

விமானங்கள் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்குவதாக கூறப்பட்டாலும், அவை இன்றும் மனிதர்களால்தான் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன என பியர்சன் தெரிவித்துள்ளார். உற்பத்தி, தரச் சோதனை மற்றும் விநியோகச் சங்கிலி பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் கடுமையான வேலை அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர் விளக்கினார்.

“மின்சார அசுரன்” என்று அழைக்கப்படும் அளவுக்கு மிகுந்த தொழில்நுட்ப சிக்கல்களைக் கொண்ட போயிங் 787 ட்ரீம்லைனர், வடிவமைப்புக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட பல செயல்பாட்டு சோதனைகளில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்ததாகவும் பியர்சன் கூறியுள்ளார். எனவே, உயிரிழந்த விமானிகளைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதற்கு முன்பு, அமைப்புசார்ந்த தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் உற்பத்தித் தோல்விகள் குறித்து முழுமையான விசாரணை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த ஆரம்பகட்ட அறிக்கையில், விமானிகள் தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ தவறு செய்ததாக உணர்த்துவதற்காக, அவர்களுக்கிடையேயான உரையாடலின் மிகச் சிறிய பகுதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக பியர்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

Aircraft Communications Addressing and Reporting System (ACARS) மற்றும் Airport Handling Manual ஆகிய அமைப்புகளில் பதிவான முக்கிய தரவுகள் எதுவும் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை என்றும், நவீன விமானங்களின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப விபத்து விசாரணை நடைமுறைகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கன்யாகுமரி கடற்பகுதியில் 3 மீன்பிடி படகுகள் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து

கன்யாகுமரி கடற்பகுதியில் 3 மீன்பிடி படகுகள் மீது சரக்கு கப்பல் மோதி...

கடலில் காணாமல் போன மீனவரை மீட்க வலியுறுத்தி குடும்பத்தினர் போராட்டம்

கடலில் காணாமல் போன மீனவரை மீட்க வலியுறுத்தி குடும்பத்தினர் போராட்டம் கடலில் தவறி...

அமெரிக்க அரசியலை உலுக்கும் ‘எப்ஸ்டைன் ஃபைல்ஸ்’ ஆவணங்கள்!

அமெரிக்க அரசியலை உலுக்கும் ‘எப்ஸ்டைன் ஃபைல்ஸ்’ ஆவணங்கள்! பல ஆண்டுகளாக உலகம் எதிர்பார்த்திருந்த...

உளுந்தூர்பேட்டையில் திமுக உட்கட்சிப் பிரச்சினை – எம்.எல்.ஏ இல்லத்தை முற்றுகையிட்டு கிராமவாசிகள் சாலை மறியல்

உளுந்தூர்பேட்டையில் திமுக உட்கட்சிப் பிரச்சினை – எம்.எல்.ஏ இல்லத்தை முற்றுகையிட்டு கிராமவாசிகள்...