அமெரிக்க அரசியலை உலுக்கும் ‘எப்ஸ்டைன் ஃபைல்ஸ்’ ஆவணங்கள்!
பல ஆண்டுகளாக உலகம் எதிர்பார்த்திருந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டைனைச் சுற்றிய சர்ச்சைகளுக்கு மீண்டும் தீவிரம் ஏற்படுத்தும் வகையில், 68 புகைப்படங்கள் அடங்கிய ‘எப்ஸ்டைன் ஃபைல்ஸ்’ ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது. இந்த எப்ஸ்டைன் ஃபைல்ஸ் என்றால் என்ன? அதில் யார் யாரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன? என்பதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுடன் நெருங்கிய நட்புறவில் இருந்த நிதி மேலாண்மை நிபுணர் ஜெஃப்ரி எப்ஸ்டைன் மீது, சிறுமிகளை கடத்தி பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்தியதாகவும், செல்வாக்கு மிக்க நபர்களுக்காக சிறுமிகளை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
முதன்முறையாக 2008-ஆம் ஆண்டு, 14 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர், புளோரிடா காவல்துறையில் புகார் அளித்தனர். அதில், எப்ஸ்டைன் தனது பாம் பீச் இல்லத்தில் அந்தச் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு வழக்கறிஞர்களுடன் ‘ப்ளீ டீல்’ எனப்படும் குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தில் எப்ஸ்டைன் ஈடுபட்டதால், கடும் தண்டனையிலிருந்து தப்பித்து, 13 மாதங்கள் சிறை தண்டனை மட்டும் பெற்றார்.
பின்னர், 11 ஆண்டுகள் கழித்து, சிறுமிகளைப் பயன்படுத்தி செயல்பட்ட பாலியல் வலையமைப்பை நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மீண்டும் கைது செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறையில் இருந்தபோது, எப்ஸ்டைன் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
இந்த இரு விசாரணைகளின் போது, எப்ஸ்டைன் வசித்த இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட பெருமளவிலான ஆதாரங்களை FBI சேகரித்தது. இந்த ஆண்டு அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட குறிப்பில், எப்ஸ்டைன் வழக்குடன் தொடர்புடைய பல ஹார்டு டிரைவ்கள், 300 ஜிகாபைட்டுக்கு மேற்பட்ட தரவுகள் மற்றும் ஆதாரங்கள் FBI வசம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சட்டவிரோத பொருட்கள் பெருமளவில் உள்ளதாக நீதித்துறை தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் எப்ஸ்டைனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த ஆவணங்களை வெளியிடாமல் தடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கடந்த நவம்பர் மாதம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் எப்ஸ்டைன் ஃபைல்ஸ் ஆவணங்களை வெளியிடக் கட்டாயப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்தச் சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்திட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னரே, அமெரிக்க நீதித்துறை இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
இதோடு மட்டுமல்லாமல், இன்னும் பல லட்சக்கணக்கான ஆவணங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளாஞ்ச் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், எப்ஸ்டைனின் கூட்டாளியான கிஸ்லேன் மேக்ஸ்வெல் மற்றும் அடையாளம் தெரியாத பெண்களுடன் நீச்சல் குளத்தில் இருப்பதைக் காட்டும் புகைப்படம் வெளியானது.
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜனநாயகக் கட்சியின் செனட் சிறுபான்மைக் கட்சித் தலைவர் சக் ஷுமர், இது ட்ரம்பை காப்பாற்றும் நோக்கில் செய்யப்படும் செயல் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், பாப் இசை உலகின் மாபெரும் நட்சத்திரம் மைக்கேல் ஜாக்சன், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் வுடி ஆலன் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் எப்ஸ்டைனுடன் இருக்கும் காட்சிகளும் இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், எப்ஸ்டைன் எவ்வளவு உயர்மட்ட செல்வாக்கு கொண்ட நபர்களுடன் நெருக்கமாக பழகியுள்ளார் என்பது வெளிப்படுகிறது.
அமெரிக்காவின் அதிகார வட்டாரங்களில், சிறுமிகளைப் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தும் ஒரு மறைமுக அமைப்பு பாதுகாக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. எப்ஸ்டைன் மரணம் முதல், அவரது தொடர்புகள் வரை பல கேள்விகள் இன்னும் விடையில்லாதவையாகவே தொடர்கின்றன.