குளோபல் சவுத்: மாறிவரும் உலக ஒழுங்கில் இந்தியா – எத்தியோப்பியா உறவு

Date:

குளோபல் சவுத்: மாறிவரும் உலக ஒழுங்கில் இந்தியா – எத்தியோப்பியா உறவு

உலக அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகள் வேகமாக மாற்றம் அடைந்து வரும் சூழலில், இந்தியா மற்றும் எத்தியோப்பியா இடையிலான உறவு, புதிய சர்வதேச ஒழுங்கை வடிவமைக்கும் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் எத்தியோப்பியா பயணம், உலகளாவிய தெற்கின் (Global South) வளர்ந்து வரும் செல்வாக்கை சர்வதேச அரங்கில் வலுவாக வெளிப்படுத்தியுள்ளது. இதன் பின்னணியே இந்தச் செய்தித் தொகுப்பு.

1490-களில் வாஸ்கோ ட காமா கடல் வழியாக இந்தியாவை அடைந்த பின்னரே ஐரோப்பியர்களின் வர்த்தக தொடர்புகள் இந்தியாவுடன் தொடங்கின. ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்தியாவும் எத்தியோப்பியாவும் வலுவான வர்த்தக உறவைப் பகிர்ந்திருந்தன. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, செங்கடலில் அமைந்த அதுலிஸ் துறைமுகம், இந்திய வணிகர்களுடன் வர்த்தகம் செய்யும் முக்கிய மையமாக இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

இந்தியாவிலிருந்து மசாலா பொருட்கள் மற்றும் பட்டு ஆடைகள் எத்தியோப்பியாவுக்கு சென்ற நிலையில், பதிலாக அந்நாடு தங்கம், தந்தம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், குஜராத்தைச் சேர்ந்த இந்தியர்கள் முதன்முறையாக எத்தியோப்பியாவில் குடியேறத் தொடங்கியதன் மூலம், இரு நாடுகளுக்கிடையிலான மனித உறவுகள் மேலும் வலுப்பெற்றன.

தற்போது எத்தியோப்பியாவில் 2,500-க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். அந்நாட்டின் கல்வித் துறையில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கிடையிலான அதிகாரப்பூர்வ தூதரக உறவுகள் 1948ஆம் ஆண்டிலேயே தொடங்கின. 1950ஆம் ஆண்டு, இந்தியாவுக்கான முதல் எத்தியோப்பிய தூதராக அடோ அமானுவேல் ஆபிரகாம் நியமிக்கப்பட்டார். இதன் மூலம், டெல்லியில் தூதரகம் திறந்த முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை எத்தியோப்பியா பெற்றது.

பேரரசர் ஹெய்லி செலாசி ஆட்சி காலத்திலும், அதன் பின்னர் வந்த ஜனநாயக அரசுகளின் காலத்திலும், இந்தியாவுடன் எத்தியோப்பியா நட்பு உறவுகளைத் தொடர்ந்து பேணி வந்துள்ளது. பனிப்போர் முடிந்த பிந்தைய காலகட்டத்திலும், விமான சேவைகள், வர்த்தகம், சிறிய அணைகள் மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள், அறிவியல்–தொழில்நுட்ப ஒத்துழைப்பு, இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு, கூட்டு வர்த்தகக் குழு அமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தச் சூழலில், கடந்த வாரம் அரசு முறை பயணமாக எத்தியோப்பியாவைச் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அரசு சிறப்பான வரவேற்பை அளித்தது. மேலும், எத்தியோப்பியாவின் உயரிய குடியரசு விருதான ‘கிரேட் ஆனர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடியும் எத்தியோப்பிய பிரதமர் டாக்டர் அபி அகமது அலியும் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தி, எட்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தங்களில், ஜி20 பொதுக் கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் கடன் மறுசீரமைப்பு, சுங்கத் துறை ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சி, எத்தியோப்பிய மாணவர்களுக்கான இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் (ICCR) உதவித்தொகை உயர்வு, ஐநா அமைதி நடவடிக்கைகளுக்கான பயிற்சி மற்றும் நிர்வாக ஒத்துழைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அடிஸ் அபாபாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் தாய்மார்களுக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கும் வழங்கப்படும் சுகாதார சேவைகளை மேம்படுத்த இந்தியா உதவுவதாக உறுதியளித்துள்ளது. மேலும், எத்தியோப்பியாவில் உள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களில் இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றன. அந்நாட்டில் தற்போது 675-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் பயணத்தின் மூலம் கூடுதலாக 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகள் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த நிதியாண்டில், இந்தியா–எத்தியோப்பியா இடையிலான இருதரப்பு வர்த்தக மதிப்பு 550.19 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இதில் இந்தியாவின் ஏற்றுமதி 476.81 மில்லியன் டாலராகவும், எத்தியோப்பியாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு 73.38 மில்லியன் டாலராகவும் பதிவாகியுள்ளது. இந்த வளர்ச்சி, இரு நாடுகளின் உறவுகள் திட்டமிட்ட மற்றும் தொலைநோக்கு அடிப்படையில் முன்னேறி வருவதை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவின் ஆப்பிரிக்கா நோக்கிய நீண்டகால உத்தி மற்றும் உலகளாவிய தெற்கின் குரலாக இந்தியா உருவெடுத்து வருவதற்கான முக்கிய எடுத்துக்காட்டாக, இந்தியா–எத்தியோப்பியா உறவு திகழ்கிறது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

25% கூடுதல் சுங்க வரியை உடனடியாக திரும்பப் பெறுங்கள் – அமெரிக்காவுக்கு இந்தியா சமர்ப்பித்த இறுதி வர்த்தக முன்மொழிவு!

25% கூடுதல் சுங்க வரியை உடனடியாக திரும்பப் பெறுங்கள் – அமெரிக்காவுக்கு...

செவிலியர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவது தான் திராவிட மாடலா?

செவிலியர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவது தான் திராவிட மாடலா? திமுக கட்சி மீண்டும்...

பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபினுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபினுக்கு சென்னை விமான நிலையத்தில்...

தமிழகத்தில் திமுக எனும் அழிவுக் கொடியை வளர அனுமதிக்கக் கூடாது

தமிழகத்தில் திமுக எனும் அழிவுக் கொடியை வளர அனுமதிக்கக் கூடாது தமிழகத்தையும், மாநில...