பிரதமர் மோடியுடன் உரையாட 1.27 கோடி பேர் பதிவு – மாணவர்களிடையே பெரும் வரவேற்பு
மாணவர்களின் தேர்வு அச்சத்தை குறைக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, இதுவரை 1.27 கோடி பேர் விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர்.
மாணவ, மாணவியர்கள் பொதுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக, கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த ஆலோசனை மற்றும் உரையாடல் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிரதமர் மோடி நேரடியாக மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடி, மனஅழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கான ஆன்லைன் முன்பதிவு, இந்த மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய சில நாட்களிலேயே நாடு முழுவதும் இருந்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என பல தரப்பினரும் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர்.
இதுவரை 1.27 கோடி பேர் பதிவு செய்திருப்பது, இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வரவேற்பாகக் கருதப்படுகிறது.