கொடைக்கானலில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலை – கடும் பனியால் வீட்டுக்குள் தஞ்சமடைந்த மக்கள்
கொடைக்கானலில் நிலவும் கடுமையான குளிர்ச்சியால், இயற்கை முழுவதும் பனியால் மூடப்பட்டு வெண்ணிறத் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. பச்சை புல்வெளிகள் மீது பனிப்படலம் போர்த்தியதுபோல் காணப்படுவதால், மலைநகரம் முழுவதும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த வாரம் முழுவதும் வறண்ட வானிலை நிலவிய நிலையில், கடந்த மூன்று நாட்களாக சில இடங்களில் உறைபனி தென்படத் தொடங்கியது. இந்நிலையில், கொடைக்கானலில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக ஜிம் கானா, கீழ் பூமி, பாம்பார்புரம், மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
வீடுகளின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் உள்ள நீர் முழுவதும் ஐஸாக உறைந்துள்ள நிலையில், புல்வெளிகளும் செடிகளும் பனியால் மூடப்பட்டு கண்கவர் காட்சியளிக்கின்றன. இந்த அரிய குளிர் சூழலைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், பனிப்பொழிவை அனுபவிக்க வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், கொடைக்கானலுக்கே வந்தால் அந்த அனுபவம் கிடைக்கும் என்றும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், உதகை பகுதியில் உள்ள காந்தல் முக்கோணம், குதிரைப் பந்தய மைதானம், தலைக்குந்தா போன்ற தாழ்வான இடங்களிலும் உறைபனி அதிகரித்து காணப்படுகிறது. கடும் குளிர் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நெருப்பை மூட்டி குளிரை சமாளித்து வருகின்றனர்.
அப்பர்பவானி, கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் நிலைக்கு சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், கடும் குளிரின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.