நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்க முயற்சி – நீதித்துறை சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்து : இளம் வழக்கறிஞர்கள் கவலை
உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முன்வரும் நடவடிக்கை, நீதித்துறையின் சுதந்திரத்தையே பாதிக்கும் செயல் எனக் குறிப்பிட்டு, குடியரசுத் தலைவருக்கு இளம் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் சில எதிர்க்கட்சிகள் பதவி நீக்கத் தீர்மானத்திற்கான நோட்டீஸ் வழங்கியிருந்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட இளம் வழக்கறிஞர்கள், குடியரசுத் தலைவருக்கு தனித்தனியாக கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதங்களில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பதவி நீக்கத் தீர்மானம் எந்தவித நியாயமும் அற்றது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 2017 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், 73,505 வழக்குகளைத் தீர்த்து வைத்துள்ள அவர், நீதித்துறையிலான தனது அர்ப்பணிப்பையும் நேர்மையையும் நிரூபித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
நீதித்துறையின் சுதந்திரத்தையும், இந்திய அரசியலமைப்பின் அடிப்படைத் தத்துவங்களையும் பாதுகாக்க, குடியரசுத் தலைவர் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் இளம் வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.