காவல் உயரதிகாரிகளின் இல்லங்களில் ஆர்டர்லிகள் இல்லை என்ற விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் ஒருவர்கூட ஆர்டர்லியாக பணியாற்றவில்லை என்று டிஜிபி கூறியிருப்பது நம்பிக்கை தருவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், கோயிலுக்குச் சொந்தமான நிலத்திற்கும் தமக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஆர்டர்லி முறை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், சீருடை அணிந்த காவலர்கள் ஆர்டர்லிகளாக செயல்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அதனை கருத்தில் கொண்டு, ஆர்டர்லிகள் முறையே இல்லை என டிஜிபி தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஆர்டர்லிகள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால், அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.