19 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால அமர்வு நிறைவு
கடந்த 19 நாட்களாக தீவிர விவாதங்களுடன் நடைபெற்று வந்த நாடாளுமன்றத்தின் குளிர்கால அமர்வு இன்று முடிவடைந்தது.
இந்தக் கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. இக்காலகட்டத்தில் வந்தே பாரதம் பாடலின் 150வது ஆண்டு விழா, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மக்களவையும் மாநிலங்களவையும் விரிவாக விவாதித்தன.
இதனைத் தொடர்ந்து, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட ‘விபி ஜி ராம் ஜி’ மசோதா, அணுசக்தி துறையில் முழுமையான தனியார் முதலீட்டை அனுமதிக்கும் ‘சாந்தி’ மசோதா, பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய விதிமுறைகள் தொடர்பான மசோதா உள்ளிட்ட பல முக்கிய சட்ட முன்மொழிவுகள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் இன்று கூடிய மக்களவை மற்றும் மாநிலங்களவை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தேநீர் விருந்தை ஏற்பாடு செய்தார். சபாநாயகர் அறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
அவையில் தொடர்ந்த அமளி, கூச்சல் மற்றும் வாக்குவாதங்களுக்கு மாறாக, கூட்டத்தொடர் நிறைவடைந்த பின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரே இடத்தில் சிரித்த முகத்துடன் கலந்துரையாடிய காட்சிகள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.
குறிப்பாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து உரையாடிய தருணங்கள் வெளியாகியுள்ளன.