வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை இன்று தொடக்கம்
சென்னை வடபழனி அருள்மிகு முருகன் திருக்கோயிலில் நடைபெறும் மகா கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது. இவ்விழாவின் ஒரு பகுதியாக, லட்சார்ச்சனை இன்று (அக்.22) காலை 9 மணிக்கு வேதமந்திர ஓசையுடன் தொடங்கியது.
திருவிழா, வரசித்தி விநாயகர் மூஷிக வாகன புறப்பாட்டுடன் நேற்று (அக்.21) மாலை கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை லட்சார்ச்சனை நடைபெற, இரவு 8 மணிக்கு மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது.
அடுத்தடுத்து,
- அக்.23 – சந்திரபிரபை புறப்பாடு
- அக்.24 – ஆட்டுக்கிடா வாகன புறப்பாடு
- அக்.25 – நாக வாகன புறப்பாடு
- அக்.26 – மங்களகிரி விமான புறப்பாடு
என தினந்தோறும் உற்சவங்கள் நடைபெறவுள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வாக அக்.27 இரவு 8 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. பின்னர், சண்முகப் பெருமான் மயில் வாகன புறப்பாடு நடைபெறும். அடுத்த நாள் அக்.28 இரவு 7 மணிக்கு வள்ளி – தேவசேனா சமேத சுப்ரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
பின்னர் நடைபெறும் பல்வேறு வைபவங்களுக்குப் பின், நவம்பர் 1 அன்று அருணகிரிநாதர் புறப்பாட்டுடன் திருவிழா நிறைவடையும்.
இந்நிகழ்வுக்கான யாகசாலை பூஜைகள் இன்று (அக்.22) மாலை 7 மணிக்கு தொடங்கி, அக்.27 உச்சிகாலத்தில் பூர்ணாஹூதி பூஜையுடன் நிறைவு பெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.