டெல்லியா? டாக்காவா? – நெருக்கடியில் சிக்கிய வங்கதேசம்!

Date:

டெல்லியா? டாக்காவா? – நெருக்கடியில் சிக்கிய வங்கதேசம்!

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வங்கதேசத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, அந்நாட்டில் அரசியல் பதற்றமும், இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக, ஷெரீஃப் உஸ்மான் ஹாடி என்ற இளம் அரசியல் செயற்பாட்டாளர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் வெடித்துள்ளன. இந்த நிலையில், யார் இந்த ஷெரீஃப் உஸ்மான் ஹாடி என்பதையும், அவரது பின்னணியையும் விளக்கும் செய்தி தொகுப்பை இங்கே காணலாம்.

32 வயதான ஷெரீஃப் உஸ்மான் ஹாடி, இளைஞர்கள் மத்தியில் தீவிர அரசியல் உணர்வுகளைத் தூண்டும் திறன் கொண்டவராக அறியப்பட்டவர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெடித்த மாணவர் போராட்டங்கள் மூலம் அவர் தேசிய அளவில் கவனம் பெற்றார். “புரட்சிகர மேடை” என்ற பொருள்படும் ‘இன்கிலாப் மஞ்சா’ அமைப்பின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்த ஹாடி, அந்த அமைப்பு தீவிரவாதச் சாயல் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையிலும் முக்கிய முகமாகவே இருந்து வந்தார்.

ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர் எழுச்சியில் முன்னணியில் இருந்த ஹாடி, இந்தியாவை “மேலாதிக்க சக்தி” என விமர்சித்து, வங்கதேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கும் போராளி என்ற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டார். தனது உயிர் பறிபோகும் சில மணி நேரங்களுக்கு முன்பு கூட, முகநூலில் “Greater Bangladesh” எனப்படும் சர்ச்சைக்குரிய வரைபடத்தைப் பகிர்ந்திருந்தார். அதில், இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் வங்கதேசத்தின் பகுதிகளாகக் காட்டப்பட்டிருந்தன.

இந்த “பெரும் வங்கதேசம்” என்ற கருத்து, 1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் வங்காளத்தின் கடைசி பிரதமர் ஹுசைன் ஷஹீத் சுஹ்ராவர்த்தி முன்வைத்த தோல்வியடைந்த “ஐக்கிய வங்காளம்” திட்டத்தின் நீட்சியாகவே பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தின் பிரதான அரசியல் கட்சிகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக ஆதரிக்காத இந்தக் கோட்பாடு, தீவிர இஸ்லாமிய அமைப்புகளின் கருத்தியலாக மட்டுமே இருந்து வருகிறது.

இந்த எண்ணத்துக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், ஹாடி இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை பொதுமக்களிடையே விதைத்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே, ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராகத் தொடங்கிய மாணவர் போராட்டங்கள், பின்னர் வங்கதேச விடுதலைப் போரின் வரலாற்றையே எதிர்க்கும் திசைக்கு திருப்பப்பட்டன. அதனால்தான் ஹசீனா ஆட்சியிலிருந்து விலகிய பின்னர், முஜிபுர் ரஹ்மான் சிலை, அவரது இல்லம் உள்ளிட்ட விடுதலைப் போரின் அடையாளங்கள் திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டன.

இந்தச் சூழலில், கடந்த ஏப்ரல் மாதம் டாக்கா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும், ஹாடி அதே சர்ச்சை வரைபடத்தை வெளிப்படையாகக் காட்சிப்படுத்தினார். அவாமி லீக் கட்சிக்கு அரசியலமைப்பு தடை விதிக்க வேண்டும் என்றும், ஜூலை போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஷேக் ஹசீனா பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். மேலும், வரவிருக்கும் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் அறிவித்திருந்தார்.

ஹாடி இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை மட்டுமே பேசினார், எழுதியார், செயல்பட்டார் என்பதை அவரது குடும்பத்தினரும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், ரிக்ஷாவில் பயணித்துக் கொண்டிருந்த ஹாடியை, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

இடது காதுக்கு மேலாக நுழைந்த குண்டு, வலது பக்கமாக வெளியேறியதில், ஹாடியின் மூளைத் தண்டு கடுமையாக சேதமடைந்தது. டாக்காவில் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பின்னர் சிங்கப்பூருக்கு தனி விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட அவர், டிசம்பர் 18ஆம் தேதி தனது மனைவி மற்றும் பத்து மாதக் குழந்தையை விட்டுவிட்டு உயிரிழந்தார்.

ஹாடியின் மரணச் செய்தி வெளியானதும், டாக்கா உள்ளிட்ட வங்கதேசம் முழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்துள்ளன. இன்கிலாப் மஞ்சா, ஜூலை புரட்சிகர கூட்டணி, தனியார் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் ஆகியவை ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்கள் முற்றுகையிடப்பட்டதால், பாதுகாப்புப் படைகள் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி கூட்டத்தை கலைத்தன. இந்தியாவுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிடுவதாகக் கூறி, முன்னணி நாளிதழ்களின் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஹாடியின் உடல் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தடைசெய்யப்பட்ட அவாமி லீக் மாணவர் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் ஃபைசல் கரீம் மசூத் மற்றும் அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவு நிர்வாகி ஆலம் கீர் ஷேக் ஆகியோர் இந்தக் கொலைக்கு காரணம் என காவல்துறை அறிவித்துள்ளது.

கொலை நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே, குற்றவாளிகள் ஐந்து முறை வாகனங்களை மாற்றி, தங்களது செல்போன்களை அழித்து, மைமன்சிங் பகுதியில் உள்ள ஹலுவாகாட் எல்லை வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றிலும் மறுத்து, டெல்லியில் உள்ள வங்கதேச தூதரை அழைத்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வங்கதேச விடுதலைப் போருக்கு எதிராக செயல்பட்டதாகப் பழி சுமத்தப்படும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தற்போது அரசியல் மேடையில் மீண்டும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட தீவிர இஸ்லாமியக் கட்சிகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுவாக, இக்கட்சிகள் வங்கதேசத்தில் ஐந்து சதவீதத்துக்கும் அதிக வாக்குகளைப் பெறாத நிலையில், ஜனநாயக மற்றும் முற்போக்கு கட்சிகளை ஒதுக்கி வைத்து, சர்ச்சைக்குரிய தேர்தல் மூலம் ஆட்சியை இஸ்லாமிய தீவிரவாத சக்திகளிடம் ஒப்படைக்கும் முயற்சி நடைபெறுகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“அல்லாஹு அக்பர்”, “டெல்லியா டாக்காவா”, “டாக்கா டாக்காதான்” போன்ற முழக்கங்கள் வங்கதேச வீதிகளில் எதிரொலிக்கின்றன. இன்கிலாப் மஞ்சாவின் சமூக வலைதளப் பக்கங்களில், இந்திய மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் உஸ்மான் ஹாடி ஒரு தியாகியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், வருங்கால நாட்களில் இந்தியா – வங்கதேச உறவு மேலும் சிக்கலான பாதையை நோக்கிச் செல்லும் அபாயம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழகம் முழுவதும் செவிலியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்!

தமிழகம் முழுவதும் செவிலியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்! பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை...

அதிவேக ஆம்னி வேன் மோதல் – இருசக்கர வாகனம் சிதறி விபத்து!

அதிவேக ஆம்னி வேன் மோதல் – இருசக்கர வாகனம் சிதறி விபத்து! நாமக்கல்...

தைவானுக்கு பெருமளவு ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்கா – பிராந்தியத்தில் அதிகரிக்கும் பதற்றம்

தைவானுக்கு பெருமளவு ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்கா – பிராந்தியத்தில் அதிகரிக்கும்...

திருச்செந்தூர் : அரசுப் பள்ளியில் வசதி குறைவு – வெளிப்புறத்தில் படிக்கும் மாணவர்கள்

திருச்செந்தூர் : அரசுப் பள்ளியில் வசதி குறைவு – வெளிப்புறத்தில் படிக்கும்...