தைவானுக்கு பெருமளவு ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்கா – பிராந்தியத்தில் அதிகரிக்கும் பதற்றம்
தைவானுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ உபகரணங்களை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தைவானுடன் எந்த நாடும் தூதரக தொடர்புகளை ஏற்படுத்தக் கூடாது என்று சீனா ஏற்கனவே கடுமையான எச்சரிக்கையை விடுத்து வரும் நிலையில், தைவான் எல்லைப் பகுதிகளில் சீனா தனது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தச் சூழலில், தைவானின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா நடுத்தர தூர ஏவுகணைகள், ஹோவிட்சர் பீரங்கிகள், ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக மொத்தம் 8 தனித்தனி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், 82 பீரங்கிகள், ஏவுகணை அமைப்புகள், ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல முக்கிய ராணுவ உபகரணங்கள் தைவானுக்கு வழங்கப்பட உள்ளன.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தால், இது தைவானுக்காக அமெரிக்கா மேற்கொள்ளும் மிகப் பெரிய ஆயுத விற்பனை ஒப்பந்தமாகும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தைவானை தனது பிரிக்க முடியாத பகுதியாகக் கருதும் சீனா, இந்த ஆயுத ஒப்பந்தங்களுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதனால் அமெரிக்கா – சீனா இடையிலான உறவுகளில் மேலும் ஒரு புதிய பதற்ற நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.