உத்தராகண்ட் : குடியிருப்புக்குள் புகுந்த கரடிகள் – மக்கள் பீதி
உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி பகுதியில், குடியிருப்பு வீட்டிற்குள் கரடிகள் நுழைந்த காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர்காசியைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதாக, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் குட்டிகளுடன் வந்த ஒரு கரடி வனத்தை விட்டு வெளியேறி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது. தொடர்ந்து அந்த கரடிகள் அருகிலிருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை சிதைத்ததாக கூறப்படுகிறது.
வீட்டின் உள்ளே கரடிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவமும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தைக் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலைமைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், கரடிகளை கூண்டு அமைத்து பிடிக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வன விலங்குகளின் தொடர் அச்சுறுத்தலால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ள அவர்கள், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் வனத்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.