அனுமன் ஜெயந்தி திருவிழா : ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் வெள்ளம்
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள பிரபல ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டுவந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மார்கழி மாத அமாவாசை தினமும் அனுமன் ஜெயந்தியும் ஒன்றாக வந்துள்ளதையடுத்து, வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். அதிகாலை நேரத்திலிருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அனுமனை வழிபட்டு வருகின்றனர்.
தமிழ் புராண மரபுகளின் படி, ராமபக்தரான அனுமன், மார்கழி மாத அமாவாசை தினத்திலும் மூலம் நட்சத்திரம் கூடிய நாளில்தான் அவதரித்ததாக நம்பப்படுகிறது. இதனால், மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை மற்ற அமாவாசைகளை விட மிகச் சிறப்பு பெற்றதாகக் கருதப்படுகிறது.
இந்த புனித நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவதுடன், அனுமனை மனப்பூர்வமாக வழிபட்டால் மன அமைதி, செல்வ செழிப்பு, உடல் வலிமை மற்றும் துணிச்சல் கிடைக்கும் என்பது பக்தர்களிடையே நிலவும் நம்பிக்கையாக உள்ளது.
மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விரதங்களிலும் வழிபாட்டு நாட்களிலும் அனுமன் ஜெயந்தி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தென் இந்திய மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் நிலையில், வட இந்திய பகுதிகளில் சித்திரை மாதத்தில் இவ்விழா அனுசரிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி இன்று அனுசரிக்கப்படுகிறது. அமாவாசை திதி இன்று காலை 5.57 மணிக்கு தொடங்கி, டிசம்பர் 20ஆம் தேதி காலை 7.54 மணி வரை நீடிக்கிறது. அதேபோல், மூலம் நட்சத்திரம் டிசம்பர் 20ஆம் தேதி அதிகாலை 12.05 மணிக்கு ஆரம்பமாகிறது.
இதனை முன்னிட்டு, ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து, பக்தி பரவசத்துடன் அனுமன் தரிசனம் செய்து வருகின்றனர்.