பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய சிவில் விருது ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’
இந்தியா – ஓமன் நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் ராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நினைவாக, பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது, ஓமன் அரசால் வழங்கப்படும் மிக உயரிய சிவில் விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஓமனில் இந்தியப் பள்ளிக்கல்வி முறை தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்நாட்டில் பிரம்மாண்ட விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினரும் மாணவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மஸ்கட்டில் அமைந்துள்ள அல் பராகா அரண்மனைக்கு பிரதமர் மோடி அழைக்கப்பட்டார். அங்கு ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சையத் அவரை அன்புடன் வரவேற்று ஆரத்தழுவினார்.
பின்னர், ஓமன் அரச அரண்மனையில் இந்தியா – ஓமன் நாடுகளுக்கிடையிலான விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் மோடி மற்றும் ஓமன் சுல்தான் முன்னிலையில், இந்தியாவின் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஓமன் வர்த்தக அமைச்சர் கைஸ் அல் யூசுப் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஓமனுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 98 சதவீதத்திற்குச் சுங்க வரி நீக்கம் செய்யப்படும். இதனால் ஜவுளி, தோல் பொருட்கள், பொறியியல் உபகரணங்கள், மருந்துத் தயாரிப்புகள் போன்ற துறைகளின் ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தகவல் தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 127 சேவைத் துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் இறுதிக் கட்டமாக, இந்தியா – ஓமன் இருதரப்பு உறவுகளை புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றதற்காக பிரதமர் மோடியின் பங்களிப்பை பாராட்டி, அவருக்கு ஓமன் நாட்டின் மிக உயரிய சிவில் விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ வழங்கப்பட்டது.
இந்த விருது இதற்கு முன் ராணி எலிசபெத், ராணி மாக்சிமா, ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ, நெல்சன் மண்டேலா, ஜோர்டான் மன்னர் அப்துல்லா உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உயரிய மரபின் தொடர்ச்சியாக, ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக், பிரதமர் மோடிக்கு இந்த விருதை வழங்கி சிறப்பித்தார்.
பின்னர், ஓமன் நாட்டிலிருந்து பிரதமர் மோடி புறப்பட்டுச் செல்லும் போது, சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவரை நேரில் வழியனுப்பினார். அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து கைக்குலுக்கி, சுல்தானை அன்புடன் ஆரத்தழுவி பிரதமர் மோடி ஓமனுக்கு விடை கொடுத்தார்.