வங்கதேசப் போரில் பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

Date:

வங்கதேசப் போரில் பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

மது, மாது, ஊழல் – போர்க்களத்துக்கு வெளியே நடந்த ஒரு பேரழிவு

வங்கதேசப் போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் சந்தித்த தோல்வி, வெறும் இராணுவ தோல்வியாக மட்டும் பார்க்க முடியாத ஒன்று. அது மது, பெண் மோகம், அதிகார ஊழல் ஆகியவற்றால் சீரழிந்த ஒரு ராணுவ ஆட்சியின் தவிர்க்க முடியாத முடிவு என பாகிஸ்தானின் விசாரணை ஆணைய அறிக்கை தெளிவுபடுத்துகிறது. அந்த பின்னணியை விரிவாக அலசுகிறது இந்தச் செய்தித் தொகுப்பு.

1971ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் போர் தொடங்கியது. கிழக்கு பாகிஸ்தானில், ஜெனரல் யஹ்யா கானின் ராணுவ ஆட்சியின் கீழ் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான அடக்குமுறைகளும் இன அழிப்பும் இந்தப் போருக்குத் தூண்டுதலாக அமைந்தன. இதனைத் தொடர்ந்து இந்தியா ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ என்ற பெயரில் தீவிர ராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

மொத்தம் 13 நாட்கள் நீடித்த இந்தப் போர், 1971 டிசம்பர் 16ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந்தியப் படைகள் தீர்மானமான வெற்றியைப் பெற்று, வங்கதேசம் ஒரு சுயாதீன நாடாக உருவெடுத்தது. இந்த வெற்றியால் இந்தியா உலக அரசியல் மேடையில் முக்கிய சக்தியாக உயர்ந்தது.

இந்தப் போரின் முடிவில், சுமார் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் இந்தியப் படைகளிடம் ஆயுதம் களைந்து சரணடைந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிகழ்ந்த மிகப்பெரிய இராணுவ சரணடைதலாக இது வரலாற்றில் பதிவானது. கிழக்கு பாகிஸ்தானின் ராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஏ.ஏ.கே. நியாசி, நடுங்கும் கைகளுடன் சரணடைதல் ஆவணத்தில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்த வேளையில், பாகிஸ்தானின் தலைமைத் தளபதியும் ராணுவ ஆட்சியாளருமான யஹ்யா கான் ராவல்பிண்டியில் மதுபோதையில் கேளிக்கைகளில் மூழ்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த பேரழிவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த சுல்பிகர் அலி பூட்டோ, பாகிஸ்தானின் தோல்விக்கான காரணங்களை ஆராய தலைமை நீதிபதி ஹமூதுர் ரஹ்மான் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார். அந்த ஆணையம் 1974ஆம் ஆண்டு தனது இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் நாட்டின் பாதுகாப்பை விட, தனிப்பட்ட இன்பவாழ்க்கை, மது போதை, ஒழுக்கக்கேடான உறவுகளில் அதிகமாக ஈடுபட்டிருந்தனர் எனக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. போர்த் தயாரிப்புகளுக்குப் பதிலாக அவர்கள் சுய இன்பங்களில் நேரத்தைச் செலவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

யஹ்யா கானின் நெருங்கிய தோழியாக அறியப்பட்ட அக்லீம் என்ற பெண், “ஜெனரல் ராணி” என்ற பெயரில் பாகிஸ்தானின் அதிகார வட்டங்களில் புகழ்பெற்றிருந்தார். எந்த அரசியல் அல்லது ராணுவ பதவியும் இல்லாதபோதும், நாட்டின் முக்கிய முடிவுகளுக்கு அவருடைய செல்வாக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஹமூதுர் ரஹ்மான் அறிக்கையில் அவர் பெயர் நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஒழுக்கமற்ற உறவுகள் எவ்வாறு ராணுவ கட்டளை அமைப்பையே சிதைத்தன என்பதற்கான அடையாளமாக ஜெனரல் ராணி இன்று வரை பாகிஸ்தான் வரலாற்றில் பேசப்படுகிறார்.

அதுபோல், புகழ்பெற்ற பாடகி நூர் ஜெஹான் “மெலடி ராணி” என்ற பெயரில் அறியப்பட்டார். பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் குடியேறிய அவர், போரின் முக்கிய காலகட்டத்தில் யஹ்யா கானின் லாகூர் இல்லத்தில் மதுவிருந்துகளுடன் காலம் கழித்ததாகவும், நாடு தீப்பற்றியிருந்த நேரத்தில் கூட ஆட்சி வட்டாரங்கள் பொறுப்பற்ற கேளிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

விசாரணை அறிக்கையின் படி, பாகிஸ்தான் தோல்விக்கான காரணங்களில் முதல் இடம் ஜெனரல் ராணி என்றால், இரண்டாவது மெலடி ராணி, மூன்றாவது லாகூரில் பாலியல் விடுதி நடத்தி வந்த சயீதா புகாரி. இவர் லெப்டினன்ட் ஜெனரல் நியாசியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல்மட்டத்தில் ஏற்பட்ட இந்த ஒழுக்கச் சீரழிவு, முழு ராணுவ அமைப்பிலும் வீரர்களின் மனஉறுதியை சிதைத்தது. போர்த் திறனை வளர்ப்பதை விட, மது போதையும் காம இச்சைகளும் அதிகாரிகளை ஆட்கொண்டதால், நாட்டிற்காகப் போராடும் மனப்பாங்கே அழிந்தது என அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

போருக்குப் பிறகு இந்தியாவில் போர் கைதியாக இருந்த ஜெனரல் நியாசி, பாகிஸ்தானுக்கு திரும்பியதும் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டார். இன்றளவும் அவர் அவமானத்துக்கும் தோல்விக்கும் அடையாளமாகவே பார்க்கப்படுகிறார். அதேபோல், யஹ்யா கான் அதிபர் பதவியும் ராணுவத் தலைமைப் பதவியும் விட்டு விலகி, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 1980ஆம் ஆண்டு பக்கவாதத்தால் உயிரிழந்தார்.

ஆனால், விசாரணை ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட பெரும்பாலான ராணுவ அதிகாரிகள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முழு அறிக்கையும் பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட நிலையில் இருந்தது. யஹ்யா கானின் மது போதையில் பாகிஸ்தான் சரிந்தது உண்மை என்றால், அந்த மயக்கத்திலிருந்து இன்னும் பாகிஸ்தான் முழுமையாக மீளவில்லை என்பதே வரலாற்றின் வேதனையான உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அலங்காநல்லூர் : அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு நிதி செலுத்தல் – ஆர்டிஐ பதில் அதிர்ச்சி

அலங்காநல்லூர் : அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு நிதி செலுத்தல் – ஆர்டிஐ...

பேருந்தில் உயிரை பணயம் வைத்து பயணிக்கும் மாணவர்கள் – வைரலான காட்சிகள்

பேருந்தில் உயிரை பணயம் வைத்து பயணிக்கும் மாணவர்கள் – வைரலான காட்சிகள் சென்னையில்...

கிராம உதவியாளர்களின் கோரிக்கைகள் ரத்தத்தில் எழுதப்பட்ட மனுவாக முதல்வரிடம் அளிக்கப்படும் – சங்கம் அறிவிப்பு

கிராம உதவியாளர்களின் கோரிக்கைகள் ரத்தத்தில் எழுதப்பட்ட மனுவாக முதல்வரிடம் அளிக்கப்படும் –...

பிரதமர் நரேந்திர மோடியை கௌரவித்த உலக நாடுகள் – சர்வதேச விருதுகளின் முழுப் பட்டியல்

பிரதமர் நரேந்திர மோடியை கௌரவித்த உலக நாடுகள் – சர்வதேச விருதுகளின்...