2075க்குள் உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக இந்தியா – கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பு
2075ஆம் ஆண்டுக்குள் இந்தியா, அமெரிக்காவை முந்தி, சீனாவுக்கு அடுத்த நிலையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
வரும் ஐம்பது ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் மையம் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் அடையப்போவதாக, உலகளவில் புகழ்பெற்ற முதலீட்டு மற்றும் நிதி சேவை நிறுவனம் கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதால், உலக பொருளாதார வரிசையில் இரண்டாம் இடத்தை உறுதியாக கைப்பற்றும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
2075ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார தரவரிசையும் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில், சீனா சுமார் 57 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் உலகின் முதலிடத்தில் திகழும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், இந்தியா சுமார் 52.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பெறும் என்றும், தற்போது முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 51.5 டிரில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் இளம் மக்கள் தொகை, தொழில்நுட்ப முன்னேற்றம், உயர்ந்து வரும் முதலீடுகள் மற்றும் தொழிலாளர் உற்பத்தித்திறன் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக இருக்கும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.