இந்திய மரபையும் மனிதாபிமான சேவையையும் ஒருங்கே உணர்ந்த மெஸ்ஸி…
உலகம் போற்றும் கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி, அனந்த் அம்பானி தொடங்கியுள்ள “வன்தாரா” வன உயிரின பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையத்தை நேரில் பார்வையிட்டார். அந்தச் சந்திப்பின் போது இந்தியாவின் பழமையான கலாச்சார மரபுகளையும், வன உயிரினங்களை காப்பாற்றும் மனிதநேய முயற்சிகளையும் அவர் அருகிலிருந்து அறிந்துகொண்டார். இதுகுறித்த விரிவான செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
“GOAT TOUR OF INDIA” எனப்படும் தனது இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் நகரங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற லயோனல் மெஸ்ஸி, அதன் பின்னர் மும்பை வந்தடைந்தார். வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில், சச்சின் டெண்டுல்கர், ஷாருக் கான் உள்ளிட்ட பிரபலங்கள் மெஸ்ஸியை வரவேற்று மரியாதை செய்தனர். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை நோக்கி மெஸ்ஸி கையசைத்தபோது, மைதானமே உற்சாக ஆரவாரத்தில் மூழ்கியது.
இதனைத் தொடர்ந்து, அனந்த் அம்பானி உருவாக்கியுள்ள “வன்தாரா” வன உயிரின பராமரிப்பு வளாகத்திற்குச் சென்ற மெஸ்ஸி, இன்டர் மயாமி அணியைச் சேர்ந்த லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரொட்ரிகோ டி பால் ஆகியோருடன் அந்த மையத்தைச் சுற்றிப் பார்த்தார். அவருக்கு பாரம்பரிய இசை, மலர் தூவி வரவேற்பு மற்றும் ஆரத்தி மூலம் இந்திய மரபுப்படி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சனாதன தர்மத்தின் அடிப்படையில் இயற்கையும், உயிரினங்களும் தெய்வீகமானவை என்ற எண்ணத்தை வெளிப்படுத்தும் வழிபாட்டு முறைகளில் மெஸ்ஸியும் அவரது குழுவினரும் பங்கேற்றனர். அதன் பின்னர், புலிகள், யானைகள், கால்நடைகள், ஊர்வனங்கள் உள்ளிட்ட பல்வேறு மீட்கப்பட்ட விலங்குகள் பாதுகாப்பாக பராமரிக்கப்படும் வன்தாரா வளாகத்தை மெஸ்ஸி விரிவாகக் கவனித்தார். வன விலங்குகளுக்காக இயற்கையை ஒத்த சூழல் உருவாக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவர் ஆச்சரியமடைந்தார். மேலும், காண்டாமிருகம், ஜிராஃப் மற்றும் யானைகளுக்கு உணவு அளித்து மகிழ்ச்சியடைந்தார்.
இதற்கு முன்பு, ஆதரவற்ற மற்றும் பாதுகாப்பற்ற குட்டி விலங்குகள் வளர்க்கப்படும் பிரிவிற்குச் சென்ற மெஸ்ஸி, அவை எவ்வாறு மீட்கப்பட்டன என்பதைக் குறித்து பராமரிப்பு குழுவினரிடம் கேட்டறிந்தார். இந்தச் சந்திப்பின் நினைவாக, அனந்த் அம்பானி மற்றும் ராதிகா அம்பானி இணைந்து ஒரு சிங்கக் குட்டிக்கு “லயோனல்” என்று பெயரிட்டனர். அதேபோல், யானைப் பராமரிப்பு மையத்தில் மெஸ்ஸி, மணிக்லால் என்ற யானைக் குட்டியை சந்தித்தபோது, அங்கு தன்னிச்சையாக நடந்த சிறிய கால்பந்து விளையாட்டு அனைவரையும் களிப்பில் ஆழ்த்தியது.
வன்தாராவில் மேற்கொள்ளப்படும் வன உயிரின பாதுகாப்பு முறைகள் குறித்து மிகுந்த பாராட்டை வெளிப்படுத்திய மெஸ்ஸி, மும்பை பயணத்தின் போது இந்திய கலாச்சாரம், மனிதாபிமான சேவைகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த அனுபவங்கள் தன்னை ஆழமாக பாதித்ததாகக் கூறினார். இறுதியாக, நாரியல் உற்சவம், மட்கா போட் போன்ற பாரம்பரிய சடங்குகளில் பங்கேற்று, உலக அமைதி மற்றும் நலனுக்காக அவர் பிரார்த்தனை செய்தார்.
இந்த நிகழ்வின் போது, மெஸ்ஸி இந்து மரபுச் சடங்குகளில் கலந்துகொண்டதும், வன விலங்குகளுடன் நேரடியாக ஈடுபட்டு பராமரிப்பு பணிகளை அறிந்துகொண்டதும், உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.