குற்றவாளிகள் தொடர்பான புதிய தகவல் : உலக அளவில் அதிர்வை ஏற்படுத்திய சம்பவம்…
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள், இந்திய வேர்களைச் சேர்ந்தவர்கள் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தத் தகவல் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
சிட்னி நகரின் முக்கிய சுற்றுலா தளமான போண்டி கடற்கரையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல், ஆஸ்திரேலிய மக்களை திகிலடையச் செய்தது. கடந்த 14ஆம் தேதி, ‘ஹனுக்கா’ திருவிழா நடைபெற்று கொண்டிருந்த வேளையில், சஜித் அக்ரம் மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் ஆகியோர் அங்கு திரண்டிருந்த பொதுமக்களை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலில் ஒரு சிறுமி உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் அதிகமானோர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் சஜித் அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார். குண்டு காயங்களுடன் உயிருடன் பிடிபட்ட அவரது மகன் நவீத் அக்ரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்தச் சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என ஆஸ்திரேலிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், போண்டி கடற்கரை தாக்குதல் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தாக்குதலின் முதன்மை குற்றவாளியான சஜித் அக்ரம், இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தெலங்கானா மாநில காவல்துறையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் வணிகவியல் பட்டம் முடித்த சஜித் அக்ரம், 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு குடியேறியுள்ளார். இந்தியாவில் அவர் வசித்த காலத்தில் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் பதிவாகவில்லை என்றும், கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தினருடன் மிகக் குறைந்த தொடர்பே வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஆஸ்திரேலியாவில் குடியேறிய பின்னர் அவர் இந்தியாவிற்கு ஆறு முறை மட்டுமே வந்ததாகவும், அவையும் சொத்து விவகாரங்கள் மற்றும் முதிய பெற்றோரைச் சந்திப்பதற்காக மட்டுமே எனவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அவரது தீவிரவாத நோக்கங்களுக்கு இந்தியாவோ அல்லது தெலங்கானாவோ எந்த வகையிலும் தொடர்புடையதல்ல என்பதையும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், சஜித் அக்ரமும் நவீத் அக்ரமும் சமீப காலத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பயணம் செய்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் பயங்கரவாத பயிற்சிகளை பெற்றார்களா என்பது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆஸ்திரேலியா முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ளது. மிகவும் கடுமையான துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்கள் நடைமுறையில் உள்ள ஆஸ்திரேலியாவில், இவ்வாறான ஒரு தாக்குதல் நிகழ்ந்துள்ளது அந்த நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.