ஜிப்மரில் செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.40 லட்சம் மோசடி – துணை பதிவாளர் தலைமறைவு
ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேர்த்துத் தருவதாக கூறி, பலரிடமிருந்து பெரும் தொகையை வசூலித்து ஏமாற்றிய வழக்கில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து, ராஜ்குமார் என்பவர் பல நபர்களிடம் இருந்து பணம் பெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன.
அண்மையில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுப் பட்டியலில் பணம் செலுத்தியவர்களின் பெயர்கள் இடம்பெறாததால் அவர்கள் சந்தேகமடைந்து புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீசார், ராஜ்குமாரை கைது செய்தனர்.
விசாரணையின் போது, மொத்தமாக ரூ.40 லட்சம் வரை பெற்றதாகவும், அதில் ரூ.35 லட்சத்தை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணை பதிவாளர் மகேஷ் என்பவரிடம் வழங்கியதாகவும் ராஜ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள துணை பதிவாளர் மகேஷை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.