அமெரிக்காவுக்குள் நுழைய மேலும் 20 நாடுகளுக்கு தடை விதிப்பு
அமெரிக்க தேசிய காவல்படை வீரர்களை குறிவைத்து நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பின்னணியில், வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான பயணக் கட்டுப்பாட்டை 39 நாடுகளுக்கு விரிவுபடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சமீப காலத்தில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவரால் அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை காலவரையற்ற முறையில் அமெரிக்க அரசு நிறுத்தி வைத்தது. இதற்கு முன்பே, அமெரிக்காவுக்குள் பயணம் செய்ய 19 நாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடையியல் பட்டியலில் மேலும் சில நாடுகளைச் சேர்ப்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் ஆலோசித்து வந்த நிலையில், தற்போது பயணத் தடை விதிக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை 39 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கோப்பில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதன் மூலம் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.