மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் பாயும் ஹைப்பர் லூப் ரயிலை வெற்றிகரமாகச் சோதித்த சீனா
ரயில் போக்குவரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய வெற்றிட ஹைப்பர் லூப் ரயிலை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
வான்வழிப் பயணத்தைவிட வேகமான, தரைவழி அதிநவீன போக்குவரத்து முறையாக உருவாகி வரும் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் குறித்து உலகின் பல நாடுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வரிசையில், சீனாவும் இந்த நவீன தொழில்நுட்பத்தை ரயில் சேவையாக நடைமுறைப்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்கான சோதனை முயற்சி ஷாங்காய் மற்றும் ஹாங்சோ நகரங்களை இணைக்கும் பாதையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முழுமையாக வெற்றிட குழாயில் இயக்கப்படும் இந்த ரயிலில் காற்று எதிர்ப்பு மிகக் குறைவாக இருப்பதால், ஒலியின் வேகத்தை மிஞ்சும் அளவிற்கு பயணிக்க ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் உதவுகிறது.
இதன் மூலம் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஷாங்காய் – ஹாங்சோ இடையேயான பயணத்தை வெறும் 9 நிமிடங்களில் முடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.