ஆசிய நாடுகளை நோக்கி ட்ரம்ப் பார்வை: புதிய C-5 கூட்டமைப்பு உருவாகுமா?
ஜி-7 அமைப்பிற்கு மாற்றாக, புதிய சர்வதேச கூட்டமைப்பான C-5 (Core Five)-ஐ உருவாக்க அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முயற்சியின் மூலம் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்தை குறைத்து, உலக அதிகார மையங்களை மறுசீரமைக்க ட்ரம்ப் முயல்கிறார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் பின்னணியை விளக்கும் செய்தி தொகுப்பு இதுவாகும்.
தற்போது ஜி-7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இருந்தாலும், இந்தக் கூட்டமைப்பு பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக ட்ரம்ப் கருதுவதாகக் கூறப்படுகிறது. அந்த நிலைமைக்கு மாற்றாக, உலக அரசியலில் வளர்ந்து வரும் ஆசிய நாடுகளை மையமாகக் கொண்டு புதிய அமைப்பை உருவாக்க அவர் விரும்புவதாகத் தெரிகிறது.
உலகின் தற்போதைய அதிகார சமநிலைகள் ஆசியாவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளை உள்ளடக்கிய Core Five என்ற புதிய கூட்டணியை அமைப்பதில் ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சுருக்கமாக C-5 என அழைக்கப்படும் இந்த அமைப்பில், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெறும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், அமெரிக்காவின் POLITICO என்ற டிஜிட்டல் செய்தி நிறுவனம், இந்தத் தகவலை முதன்முதலில் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெள்ளை மாளிகை வெளியிட்ட தேசிய பாதுகாப்பு வியூகம் தொடர்பான ஆவணத்தின் ஆரம்ப வரைவு (rough draft) பதிப்பில், C-5 கூட்டமைப்பை உருவாக்கும் யோசனை இடம்பெற்றிருந்ததாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார சக்தி, அரசியல் செல்வாக்கு மற்றும் அதிக மக்கள் தொகை ஆகிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த Core Five அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் உலகின் தற்போதைய அதிகார மையங்களை ஒரே மேசையில் அமர்த்த ட்ரம்ப் முயல்கிறார் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த அமைப்பின் வெளிப்படையான நோக்கம் மத்திய கிழக்கு பகுதிகளில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் ஆதிக்கத்திற்கு ஒரு கட்டுப்பாடு விதிப்பதே ட்ரம்பின் மறைமுக நோக்கம் என சந்தேகம் எழுகிறது.
POLITICO வெளியிட்ட செய்தியை வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக மறுத்திருந்தாலும், ட்ரம்பின் சிந்தனையில் இந்த யோசனை உறுதியாக இருப்பதாக பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை நிபுணர்கள் கூறுகின்றனர். பைடன் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழு தலைவராக இருந்த டோரே டாஸிக் (Torrey Taussig), ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க நிர்வாகத்தைச் சவால் செய்தால், ரஷ்யாவை ஐரோப்பாவின் முக்கிய சக்தியாக முன்னிறுத்த ட்ரம்ப் தயாராக இருக்கலாம் என எச்சரித்துள்ளார்.
மேலும், ட்ரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் செனட் உறுப்பினராக இருந்த மைக்கேல் சோபோலிக் (Michael Sobolik), சீனா உள்ளிட்ட பல நாடுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே ட்ரம்ப் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கூறுகையில், C-5 கூட்டமைப்பின் மூலம் இன்றைய உலக அரசியல் அதிகார மையங்களை தெளிவாக அடையாளப்படுத்த ட்ரம்ப் முயல்கிறார் என்றும், ஐரோப்பிய நாடுகளுக்கும், நேட்டோ அமைப்புக்கும் எதிரான ஒரு எதிர்மறை பார்வை அவரிடம் உருவாகத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.