தாய்லாந்தில் மறைந்துள்ள லுத்ரா சகோதரர்கள் – அவர்களை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடிய கோவா காவல்துறை!
கோவாவில் ஏற்பட்ட பெரும் கேளிக்கை விடுதி தீ விபத்து வழக்கில், நாடு கடத்தி தாய்லாந்தில் தஞ்சமடைந்த ரிசார்ட் உரிமையாளர்களை பிடிக்க, கோவா போலீசார் இன்டர்போல் உதவியுடன் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்த Birch by Romeo Lane என்ற இரவு கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பரிதாபகரமான தீ விபத்தில், சமையல்காரர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு பின் விடுதியின் தலைமை நிர்வாகிகள், பார் மேனேஜர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் விடுதியின் உரிமையாளர்களான சவுரப் மற்றும் கௌரவ் லுத்ரா, விபத்துக்குப் சில மணி நேரங்களிலேயே இந்தியாவை விட்டு தாய்லாந்திற்கு தப்பிச் சென்றனர்.
FIR படி, தீ விபத்து நள்ளிரவு 12.04 மணிக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே நாளின் அதிகாலை 5.30 மணிக்கே லுத்ரா சகோதரர்கள் டெல்லியில் இருந்து இண்டிகோ விமானத்தில் புறப்பட்டு, தாய்லாந்தின் புகெட்டில் இறங்கியிருக்கின்றனர். அவர்கள் அங்கு இன்டர்போல் கண்காணிப்பை தவிர்க்கும் வகையில் மறைந்து இருப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
குறிப்பாக, லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னரே தாய்லாந்து சென்று விட்டதால், இவர்களை இந்தியாவுக்கு மீண்டும் அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் ஒரு முகவரியைப் பயன்படுத்தி 42 நிறுவனங்களை இயக்கியிருந்தனர் என்பதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனாலேயே அவர்கள் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதனுடன், தீ விபத்து நடந்த கட்டடத்தின் உரிமையாளரான சுரிந்தர் குமார் கோஷ்லாவும் விசாரணை வலையத்தில் சிக்கியுள்ளார். அவர் இங்கிலாந்து குடியுரிமை உடையவர் என்பதால், வெளிநாடு செல்லாமல் தடுக்கும் நோக்கில் அவருக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சவுரப்–கௌரவ் லுத்ரா சகோதரர்களை கைது செய்ய மத்திய அமைப்புகளும் இன்டர்போலும் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர். விரைவில் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என கோவா டிஐஜி வர்ஷா சர்மா தெரிவித்துள்ளார்.
25 பேரின் உயிரிழப்பு குறித்து அவர்களின் அரசு நீதி பெறச்செய்வது உறுதி என கோவா முதலமைச்சரான பிரமோத் சாவந்தும் வலியுறுத்தியுள்ளார். லுத்ரா சகோதரர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் மேலும் தாமதம் ஏற்பட்டால், கோவா போலீசார் தாய்லாந்து நேரடியாகச் சென்று நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளனர் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.