வங்கதேசத்தில் 11 மாதங்களில் 83 காவல் கண்காணிப்பு மரணங்கள் – ஷேக் ஹசீனாவின் ஆட்சியைவிட மோசமான சூழல்!
கடந்த ஒரு ஆண்டாக வங்கதேசம் முழுவதும் காவல்துறை காவலில் மரணங்கள், கொலைச் சம்பவங்கள், கடுமையான மனித உரிமை மீறல்கள் ஆகியவை இடைவிடாமல் நடைபெற்று வருவதாகவும், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதையும் காட்டும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த ஒரு விரிவான செய்தி:
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, நீண்டகால ஆட்சியில் மனித உரிமை மீறல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டதால், அவரின் ஆட்சி சர்வாதிகாரமாக மாறுவதாக விமர்சிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த அவர் மீது நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, இறுதியில் 2024 ஆகஸ்ட் 5 அன்று பதவியை விட்டு விலகி இந்தியாவில் புகலிடம் நாடினார்.
அதற்குப் பிறகு அதிகாரத்தில் வந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் அமைதி நிலவும், மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்தது. ஆனால் தற்போது அதற்கு எதிரான தரவுகள் வெளிப்படுகின்றன. சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆன பின்னரும், மனித உரிமை மீறல்களைத் தடுக்க சரியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 256-க்கும் மேற்பட்ட கலவரங்களும் தாக்குதல்களும் நிகழ்ந்துள்ளன. இதில் 140 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 231 பேருக்கு மேல் கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்றுள்ளனர் என Human Rights Support Society (HRSS) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இந்த வன்முறைகளால் இந்து சமூகத்தின் வீடுகள், கோவில்கள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. துர்கா பூஜை மற்றும் பல இந்து நிகழ்வுகள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், சில இஸ்லாமிய அமைப்புகள் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு வன்முறையை பயன்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், Ain o Salish Kendra (ASK) வெளியிட்ட அறிக்கையில், கடந்த 11 மாதங்களில் சட்டவிரோதமாக 29 பேர் காவல் நிலையங்களில் இறந்துள்ளதாகவும், 28 தண்டனை கைதிகளும் 55 விசாரணை கைதிகளும் சிறைகளில் சந்தேகமான நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, 90 கைதிகள் நோயால் இறந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரி சஹாதத் ஹொசைன், தற்கொலை, கலவரங்களில் இறந்தவர்களை கூட மனித உரிமை அமைப்புகள் காவல் மரணங்களாக கணக்கிட்டு வருகின்றன என்று விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், 2024 ஆகஸ்ட் முதல் 2025 ஜூலை வரை இடைக்கால அரசின் காலத்தில் பத்திரிகையாளர்கள் மீது 878 தாக்குதல்கள் நடந்துள்ளதாக Rights and Risks Analysis Group (RRAG) குறிப்பிட்டுள்ளது—இது முந்தைய ஆண்டை விட 230% அதிகம்.
சட்டத்திற்கு புறம்பான அனைத்து கொலைகள் மற்றும் காவல் கண்காணிப்பு மரணங்கள் தொடர்பாக சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், மேலும் காவல்துறை சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.