உலக முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுப் பேரலை : இந்தியா முன்னுரிமை பெற்ற இலக்கு!
தொழில்நுட்ப துறையில் மத்திய அரசு இன்னும் வலுவாக முன்னெடுத்து வரும் மாற்றங்களின் விளைவாக, மைக்ரோசாஃப்ட், கூகுள், காக்னிசன்ட் போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் மாபெரும் முதலீடுகளை செலுத்தி வருகின்றன. இதன் பின்னணி குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு துறையும் தொழில்நுட்ப சார்ந்த வடிவமைப்பில் வேகமாக மாறும் சூழலில், இந்தியாவும் அதே திசையில் புதிய உயரங்களை எட்டிக் கொண்டு வருகிறது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இணையாக டிஜிட்டல் வளர்ச்சியில் இந்தியா தடம் பதித்து தனிச்சிறப்புடன் நிற்கிறது.
இந்த தொழில்நுட்ப முன்னேற்றமே, உலகளாவிய நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யத் தூண்டக்காரணமாக உள்ளது. ஏஐ பயன்பாடு அதிவேகமாக அதிகரிக்கும் காலத்தில், பெரும் நிறுவனங்கள் வளர்ந்த நாடுகளை விட இந்தியாவிலேயே முதலீடு செய்வதை விரும்புகின்றன.
பிரதமர் மோடியைக் சந்தித்து பேசிய பிறகு, இந்நிறுவனங்களின் முதலீட்டு உற்சாகம் மேலும் பலமாகியுள்ளது. மைக்ரோசாஃப்டும் கூகுளும் இந்தியாவில் அதிக முதலீடு செய்வதில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் நிலை உருவாகியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் ஏஐ தரவு மையத்தை உருவாக்க கூகுள் 15 பில்லியன் டாலர் ஒதுக்கியிருக்க, அதனை விட உயர்வாக 17.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏஐ முதலீட்டை மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. இது ஆசியா கண்ட அளவில் ஏஐ துறைக்கான மிகப்பெரிய முதலீடாகக் கருதப்படுகிறது.
ஏஐ மட்டும் அல்ல, செமிகண்டக்டர் உற்பத்தித்துறையிலும் இந்தியா உலக நிறுவனங்களின் முதல் விருப்பமாக மாறியுள்ளது. இன்டல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பேஜூ தன், பிரதமர் மோடியை சந்தித்ததை அடுத்து, டாடாவுடன் இணைந்து இந்தியாவில் செமிகண்டக்டர் தயாரிப்பில் ஈடுபட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் திறமையான தொழில்நுட்ப நிபுணர்கள் பெருமளவில் இருப்பதே, உலக நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வருவதற்கான முக்கிய காரணமாக நிபுணர்கள் கூறுகின்றனர். உலகில் உள்ள சிப் வடிவமைப்பு பொறியாளர்களில் சுமார் 20% பேர் இந்தியாவில்தான் உள்ளனர் என்பதே அவர்களின் முக்கிய ஆதாரம்.
அதனுடன், தொழில்நுட்ப துறைக்கான மத்திய அரசின் மிக எளிமையான மற்றும் பாதுகாப்பான கொள்கைகளும் உலக நிறுவனங்களை கவர்ந்திழுக்கின்றன என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உற்பத்திக்கும் விற்பனைக்கும் ஏற்பான சூழல் உருவாகி வரும் நிலையில், இந்தியாவின் வளர்ச்சி வேகம் ராக்கெட்டுக்கே போட்டியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.