‘டாக்சிக்’ வெளியீட்டில் தடைகள் – மீண்டும் தள்ளிப்போகுமா?
‘கே.ஜி.எஃப் 2’ வெற்றிக்குப் பிறகு, யாஷ் நடித்துவரும் புதிய படம் ‘டாக்சிக்’ வெளியீடு மீண்டும் தாமதமாகும் வாய்ப்பு அதிகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் பலமுறை வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் மார்ச் 19, 2026 என இறுதியாக வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்த தேதிக்கும் சாத்தியம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் — படக்குழு சமீபத்தில் சில காட்சிகளை திரையிட்டபோது, அவை கமர்ஷியல் கோணத்தில் திருப்திகரமாக இல்லை என யாஷ் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தக் காட்சிகளை மறுபடியும் படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனுடன், தயாரிப்பு செலவுகள் ஏற்கெனவே திட்டமிட்ட அளவைத் தாண்டி போய்விட்டதால் தயாரிப்பாளர்கள் கூட சற்று தயக்கத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையில், ‘டாக்சிக்’ வெளியீடு மேலும் தள்ளிப்போகும் வாய்ப்புகள் அதிகம். வெளியீட்டு தேதிக்கான இறுதி தீர்மானம் சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.