ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் உட்பட 15 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
ஜார்க்கண்ட் மாநிலத்தில், ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நக்சலைட்டு தலைவர் உட்பட 15 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள சரண்டா காடுகளில், கிரிபுரு பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இருதரப்புகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த என்கவுன்டரில் 15 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதில், ஜார்க்கண்ட் அரசு ரூ.1 கோடி சன்மானம் அறிவித்திருந்த முக்கிய நக்சலைட்டு தலைவர் பதிராம் மாஞ்சி என்பவரும் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.