புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்காக நோபல் பரிசு – மூவருக்கு பெருமை
இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜோயல் மோக்கிர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிலிப் அகியான், மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ஹோவிட் ஆகிய மூவருக்கும் வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டின் நோபல் பரிசுகள் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் கடைசியாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்சஸ் அறிவித்துள்ளது.
புதுமை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக இவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. தொழில்நுட்பத்தின் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை நிபந்தனைகளை வெளிப்படுத்தியதற்காக பரிசுத் தொகையின் 50% ஜோயல் மோக்கிர்க்கு வழங்கப்படும் எனவும், படைப்பூக்க அழிப்பு (Creative Destruction) என்ற கோட்பாட்டின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான கருத்துக்களை உருவாக்கியதற்காக பிலிப் அகியான் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு மீதமுள்ள 50% பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராயல் ஸ்வீடிஷ் அகாடமி வெளியிட்ட சமூக ஊடக பதிவில்,
“கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் மனித வரலாற்றில் முதன்முறையாக உலகம் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியை அனுபவித்துள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு பொருளாதார நோபல் பரிசு பெற்றவர்கள், அந்த வளர்ச்சிக்குப் பின்னால் புதுமை எப்படி இயக்க சக்தியாக செயல்படுகிறது என்பதை விளக்கியுள்ளனர்,” என கூறப்பட்டுள்ளது.
மேலும், மனித வரலாற்றில் பெரும்பாலான காலங்களில் வளர்ச்சியை விட பொருளாதார மந்தநிலையே வழக்கமாக இருந்து வந்ததாகவும், தொடர்ச்சியான வளர்ச்சிக்குத் தடையாக உள்ள சவால்களை உணர்ந்து, அவற்றை சமாளிக்க வேண்டிய அவசியத்தை இவர்களின் ஆய்வுகள் எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அகாடமி தெரிவித்துள்ளது.