பராசக்தி திரைப்படக் கண்காட்சியை நேரில் கண்ட படக்குழுவினர்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பராசக்தி திரைப்படம் தொடர்பான சிறப்பு கண்காட்சியை, அந்தப் படத்தின் படக்குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கிய பொருட்கள் மற்றும் காட்சியமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு, வள்ளுவர் கோட்டத்தில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கதை 1960களைக் காலகட்டமாகக் கொண்டதால், அந்த காலத்தை பிரதிபலிக்கும் கார்கள், உடைகள் உள்ளிட்ட பல பழமையான பொருட்கள் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியை படக்குழுவினர் தொடங்கி வைத்து, விரிவாகச் சுற்றிப் பார்த்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் சுதா கொங்கரா, மக்களின் உரிமைப் போராட்டங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் தனக்கு தேசிய விருது கிடைக்க காரணமான சுதா கொங்கராவின் படத்தில் பணியாற்றியது பெரும் மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற நடிகர், நடிகையர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.