இஸ்லாமியர்களும் சூரிய நமஸ்காரம் செய்யலாம் – ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே கருத்து
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்த தடையும் இல்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள சந்த் கபீர் நகரில் நடைபெற்ற இந்து சம்மேளன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்தியா அனைத்து மதங்களையும் கலாசாரங்களையும் மதிக்கும் நாடாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், கலாசாரம் மற்றும் அறிவுத் துறைகளில் உலகளாவிய முன்னணித் தலைமையாக இந்தியா உருவாக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சுற்றுச்சூழலைக் காக்கும் நோக்கில், ஆறுகளுக்கும் சூரியனுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். சூரிய நமஸ்காரம் செய்வதால் இஸ்லாமியர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
சூரிய நமஸ்காரம் என்பது மதச்சடங்கு அல்ல; அது அறிவியல் அடிப்படையிலான, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பயிற்சி என விளக்கிய ஹோசபலே, இந்த நடைமுறை யாருக்கும் தீங்கு விளைவிக்காது என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்து தர்மம் உயர்ந்த மனிதநேய அடிப்படைகளைக் கொண்டதாகவும், அனைவரையும் உள்ளடக்கிய பொதுவான பண்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் தத்தாத்ரேய ஹோசபலே தனது உரையில் குறிப்பிட்டார்.