வங்கதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஷெரீஃப் உஸ்மான் பின் ஹாடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
வங்கதேசத்தில் இன்கிலாப் மஞ்சோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த ஷெரீஃப் உஸ்மான் பின் ஹாடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, டாக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக போராட்டம் நடைபெற்றது.
2024 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு கொள்கையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் தொடங்கிய மக்கள் எழுச்சி இயக்கத்தில் முக்கிய ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ஷெரீஃப் உஸ்மான் பின் ஹாடி. அவர், வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி பிஜோய்நகர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஹாடியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். தலையில் குண்டு பாய்ந்து கடுமையாக காயமடைந்த அவர், உடனடியாக டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டாக்காவின் சட்டோகிராம் பகுதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஷெரீஃப் உஸ்மான் பின் ஹாடி கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அவாமி லீக் கட்சி மற்றும் இந்தியாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தூதரக வளாகம் அருகே திரண்டிருந்த போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். மேலும், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் இந்திய துணைத் தூதரகம் அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.