2026 BRICS உச்சி மாநாட்டுக்கு இந்தியா தயாராகிறது – மோடியின் எத்தியோப்பியா பயணம் ஏற்படுத்திய திருப்பம்
பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எத்தியோப்பியா அரசுப் பயணம், அந்த நாட்டுடனான இருதரப்பு உறவுகளை மேலும் உறுதிப்படுத்தியதோடு, 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ள BRICS உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துவதற்கான வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. இதன் பின்னணியை விரிவாகப் பார்ப்போம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் முதல் கட்டமாக ஜோர்டானுக்கு சென்ற அவர், அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்தியா–ஜோர்டான் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். ஜோர்டான் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோர்டானில் தனது நிகழ்ச்சிகளை முடித்த பிரதமர் மோடி, அடுத்ததாக எத்தியோப்பியா சென்றார். கடந்த 15 ஆண்டுகளில் எத்தியோப்பியாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்பதால், இந்தச் சுற்றுப்பயணம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் ஆதரவுடன் சமீபத்தில் BRICS கூட்டமைப்பில் எத்தியோப்பியா இணைந்துள்ள நிலையில், இந்தப் பயணம் இருநாட்டு நட்புறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமத் அலி தலைமையில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற இருதரப்பு சந்திப்புகளில், உலக அரசியல் நிலவரம், பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் குரலை சர்வதேச அரங்கில் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, எத்தியோப்பியா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவருக்கு ‘நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ எனப்படும் அந்நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டது.
இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் குறிப்பாக சூரிய மின்சாரம் தொடர்பான திட்டங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எத்தியோப்பியாவில் சோலார் கூரை அமைப்புகள், சோலார் பம்புகள் நிறுவுதல் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மின்சார வசதியை மேம்படுத்தும் நோக்கில் இரு நாடுகளும் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளன. இதற்கு மேலாக, டிஜிட்டல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு மற்றும் சுரங்கத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.
எத்தியோப்பியாவின் மக்கள்தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் விவசாயத்தை நம்பி வாழ்வதால், உணவு பாதுகாப்பு, வேளாண் உற்பத்தி வளர்ச்சி மற்றும் விவசாய தொழில்நுட்பம் குறித்தும் முக்கியமான ஆலோசனைகள் இடம்பெற்றன. இதனுடன், பொது டிஜிட்டல் கட்டமைப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் சுரங்க வள மேம்பாடு தொடர்பான விடயங்களும் விவாத மேசையில் இருந்தன.
தற்போது இந்தியா–எத்தியோப்பியா இடையேயான வர்த்தக மதிப்பு 571.52 மில்லியன் டாலரை தாண்டியுள்ள நிலையில், 650-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் சுமார் 5 பில்லியன் டாலர் அளவில் எத்தியோப்பியாவில் முதலீடு செய்து, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளன. இதன் மூலம், எத்தியோப்பியாவின் முக்கிய வர்த்தக மற்றும் முதலீட்டு கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
ஏற்கனவே கல்வி, பண்பாடு மற்றும் மனித வள மேம்பாடு போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கிடையே வலுவான உறவுகள் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், இந்தியா–எத்தியோப்பியா உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்திய இந்த நெருக்கம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள BRICS மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துவதற்கான வாய்ப்பை உறுதி செய்யும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.