மார்கழி வியாழனை முன்னிட்டு திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள்
மார்கழி மாத வியாழக்கிழமையை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குருபகவானை வழிபட பெருந்திரளான பக்தர்கள் கூடினர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது தலமாகவும், குரு ஸ்தலமாகவும் போற்றப்படும் இந்த ஆலயம், பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையின் மையமாக விளங்கி வருகிறது.
வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபட்டால் விரும்பிய பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களிடையே நிலவும் உறுதியான நம்பிக்கையாக உள்ளது. அதனாலேயே, மார்கழி மாதத்தின் முதல் வியாழனை முன்னிட்டு, அதிகாலை முதலே பக்தர்கள் திருச்செந்தூரை நோக்கி வருகை தந்தனர்.
திருச்செந்தூர் கடற்கரையிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசைகளில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக, பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் முதியோர் மற்றும் சிறப்பு பிரிவுகளுக்கான தரிசன வரிசைகளில் பெரும் கூட்டம் காணப்படுகிறது.
பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, தரிசனம் சீராக நடைபெற நடவடிக்கை எடுத்து வருகிறது.