நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நாளை அனுமன் ஜெயந்தி – மலர்ச் சோலையாக கோயில் வளாகம்
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நாமக்கலில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற 18 அடி உயர ஆஞ்சநேயர் கோயில் பிரகாரம் முழுவதும், சுமார் இரண்டரை டன் எடையுடைய பலவகை வண்ண மலர்களால் கண்கவர் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற உள்ள அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நாளில், ஆஞ்சநேயர் சுவாமி சுமார் ஒரு லட்சத்து எட்டு வடைகளால் தயாரிக்கப்பட்ட வடை மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். மேலும், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அந்த ஒரு லட்சத்து எட்டு வடைகள் பிரசாதமாக வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரோஜா, சாமந்தி, ஜிப்ஸி உள்ளிட்ட பல்வேறு வகை மலர்களால் கோயில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.