டெல்லியில் காற்று மாசுபாடு உச்சம் – பழைய கார்களுக்கு தடை, எரிபொருள் வழங்கவும் கட்டுப்பாடு
டெல்லி: தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், பழைய வாகனங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை டெல்லி அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி, மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பழைய கார்களுக்கு டெல்லிக்குள் நுழையவும் தடையிடப்பட்டுள்ளது.
டெல்லி–நொய்டா நேரடி மேம்பால சாலை உள்ளிட்ட பகுதிகள் புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளன. குறிப்பாக சில்லா எல்லைப் பகுதியில் காற்றின் தரக் குறியீடு (AQI) சுமார் 490 ஆகப் பதிவாகி, மிகவும் ‘ஆபத்தான’ நிலையை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி–என்சிஆர் பகுதியில் உள்ள 2.88 கோடி வாகனங்களில் 93 சதவீதம் இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களாகும். இதில் சுமார் 37 சதவீதம் BS-3 அல்லது அதற்கு முந்தைய பழைய வாகனங்கள் எனத் தெரிய வந்துள்ளது. இவ்வகை வாகனங்கள், புதிய வாகனங்களை விட 31 மடங்கு அதிக துகள் பொருட்களையும், 16 மடங்கு அதிக நைட்ரஜன் டைஆக்சைடையும் வெளியிடுகின்றன. டெல்லியின் PM 2.5 காற்று மாசுபாட்டில் சுமார் 40 சதவீதம் இவ்வகை வாகனங்களே காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, Graded Response Action Plan (GRAP) அடிப்படையில் டெல்லி காவல்துறை மற்றும் போக்குவரத்து அமலாக்கத் துறையினர் கடும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட BS-6 அல்லாத வணிக மற்றும் தனியார் வாகனங்கள் தீவிரமாகச் சோதிக்கப்படுகின்றன. சாலைகளில் தடுப்புகள் அமைத்து, வாகனங்களின் பதிவு எண் மூலம் BS விதிமுறைகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் கையடக்க டிஜிட்டல் கருவிகள் மூலம் உடனடியாக சரிபார்க்கப்படுகின்றன.
அரசு விதிகளை மீறும் வாகனங்களுக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், அபராதம் செலுத்தாத வாகனங்கள் டெல்லிக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றன. செல்லுபடியாகும் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத ஓட்டுநர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய விதிகளின்படி,
- 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்கள்,
- 10 ஆண்டுகள் பழைய டீசல் வாகனங்கள்
டெல்லியில் பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், BS-6 வாகனங்கள் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. BS-2, BS-3, BS-4 வாகனங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்குள் ஏற்கனவே இயங்கும் வெளியூர் வாகனங்களும் கடும் கண்காணிப்பில் உள்ளன.
மாசு உமிழ்வு தரநிலைகளை பூர்த்தி செய்யாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், செல்லுபடியாகும் PUC சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பெட்ரோல் நிலையங்களும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படுகின்றன.
மேலும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் CNG மற்றும் மின்சார வாகனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடுமையான காற்று மாசுபாட்டுடன் சேர்ந்து மூடுபனியும் நிலவி வருவதால், டெல்லி மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு எடுத்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள் நிலைமையை சீர்செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.