எத்தியோப்பியாவில் இருப்பது பெரும் மகிழ்ச்சி – பிரதமர் மோடி உரை
சிங்கங்களின் தேசமாக அறியப்படும் எத்தியோப்பியாவில் காலடி எடுத்து வைப்பது தனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய மக்களின் பிரதிநிதியாக எத்தியோப்பியாவில் நிற்பது தமக்கு கிடைத்த ஒரு பெரும் வாய்ப்பும் பெருமையும் என குறிப்பிட்டார்.
சிங்கங்களின் நிலமாக புகழ்பெற்ற எத்தியோப்பியாவில் இருப்பது உண்மையிலேயே மனதிற்கு நெகிழ்ச்சியூட்டுவதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், தனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் வாழ்விடமாக இருப்பதால், இங்கு வந்தபோது வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாக பிரதமர் மோடி உணர்ச்சிப் பொங்க தெரிவித்தார்.
இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ மற்றும் எத்தியோப்பியாவின் தேசிய கீதம் இரண்டிலும் தாய்நாடு தாய் என போற்றப்படுவது, இரு நாடுகளுக்கும் இடையிலான பண்பாட்டு ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
பிரதமரின் உரையை கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
கரவொலி முழங்கிக் கொண்டிருந்தபோது, பல எம்பிக்கள் தங்களின் இருக்கைகளிலிருந்து முன்னே வந்து பிரதமர் மோடியுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதற்கு முன் எத்தியோப்பியாவில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்நிகழ்வில் ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலித்தபோது, பிரதமர் மோடி கைதட்டி உற்சாகத்துடன் ரசித்தார்.