சீன மின்சார வாகனங்கள்: பாதுகாப்பு அபாயம் குறித்து மேற்கத்திய நாடுகளில் அதிகரிக்கும் அச்சம்
சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள், உளவு நடவடிக்கைகளுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் ஆபத்தாக மாறக்கூடும் என்ற சந்தேகத்தின் காரணமாக, மேற்கத்திய நாடுகள் கடும் கவலையில் உள்ளன. இது தொடர்பான விரிவான செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்படும் சீன மின்சார கார்கள் மற்றும் பேருந்துகள், உலகின் பல பகுதிகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள டிஜிட்டல் கேமராக்கள், மைக்ரோஃபோன்கள், சென்சார்கள் மற்றும் இணைய இணைப்பு போன்ற அம்சங்கள் பயனர்களை ஈர்த்து வருவதால், அவற்றின் விற்பனையும் வேகமாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இவ்வாகனங்கள் மூலம் முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அவை உளவு நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக, சீன வாகனங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.
மேலும், மென்பொருள் புதுப்பிப்பு வசதி கொண்ட இந்த வாகனங்களை தொலைதூரத்திலிருந்து இயக்கவோ அல்லது நிறுத்தவோ முடியும் என்பதால், அவசர காலங்களில் போக்குவரத்து அமைப்புகள் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இத்தகைய வாகனங்கள் சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படக்கூடும் என்ற சந்தேகம், அந்த நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது. சக்கரங்களின் மீது இயங்கும் கணினி அமைப்புகளைப் போலவே இவை செயல்படுகின்றன என்பதே அவர்களின் அச்சத்தின் காரணமாகும்.
இந்தச் சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் விவகார பொறுப்பாளர் மார்கரேத்தே வெஸ்டேகர், சீன தயாரிப்பு வாகனங்களை “கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள்” என வர்ணித்துள்ளார். ஐரோப்பிய சாலைகளில் சீன வாகனங்கள் அதிக அளவில் இயங்கிவரும் நிலையில், சீனாவுடன் அரசியல் மோதல் உருவானால், அவை தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேபோல், டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளில் இயக்கப்பட்டு வரும் சீன தயாரிப்பு பேருந்துகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அந்நாடுகளின் போக்குவரத்து நிறுவனங்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. ‘ஓவர் தி ஏர்’ தொழில்நுட்பத்தின் மூலம் இந்த பேருந்துகள் புதுப்பிக்கப்படுவதால், உற்பத்தியாளர்கள் அல்லது ஹேக்கர்கள் தொலைதூரத்திலிருந்து அவற்றை நிறுத்தக்கூடும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அமெரிக்காவிலும் சீன வாகனங்கள் தொடர்பான அச்சம் தீவிரமடைந்துள்ளது. இது குறித்து அமெரிக்க செனட் சபை நடத்திய விசாரணையில், சீன அரசு வழங்கும் பெரும் மானியங்கள், விநியோகச் சங்கிலி கட்டுப்பாடுகள் மற்றும் போட்டியாளர்களை ஒதுக்கும் நடைமுறைகள் ஆகியவை சீனாவை உலகின் முன்னணி கார் ஏற்றுமதி நாடாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், சீன தயாரிப்பு வாகனங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் பெரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என அமெரிக்க செனட் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிக்-டாக் செயலியைப் போலவே, சீன வாகனங்களிலும் மறைமுக அபாயங்கள் உள்ளதாகக் கூறும் தொழில்நுட்ப நிபுணர்கள், ஒருமுறை இவ்வாகனங்களை பயன்படுத்தத் தொடங்கினால், அதிலிருந்து விலகுவது எளிதல்ல எனவும் தெரிவித்துள்ளனர். எதிர்கால போக்குவரத்தின் முக்கிய அங்கமாக மின்சார வாகனங்கள் மாறி வரும் நிலையில், அடுத்த 15 ஆண்டுகளில் இந்த சந்தையை யார் கட்டுப்படுத்தப்போகிறார்கள் என்பதே தற்போது உலக நாடுகளின் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.