சிந்துவெளி குறியீடுகளுடன் பாறை ஓவியம் கண்டுபிடிப்பு – பண்டைய தமிழர் வாழ்வியலை வெளிப்படுத்தும் அரிய சான்று
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சங்ககால தமிழர்களின் பண்பாடு, சமூக வாழ்க்கை மற்றும் நம்பிக்கைகளை எடுத்துரைக்கும் வகையில், கிருஷ்ணகிரி அருகே புதிதாக கண்டறியப்பட்ட பாறை ஓவியம் பெரும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பு குறித்து விரிவாக இச்செய்தித் தொகுப்பில் காணலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் எட்டிமரத்துக்குழி கிராமத்தை அடுத்த பூமலை உச்சியில் அமைந்துள்ள நாகஜுனை பகுதியில், இந்தப் பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மனிதர்களும் விலங்குகளும் இடம் பெற்ற பாறை ஓவியங்கள் பரவலாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன், நூற்றுக்கும் மேற்பட்ட குறியீடுகளைக் கொண்ட பாறை ஓவியங்கள் பெரியகோட்டப்பள்ளி மற்றும் மலையாண்டஹள்ளியை அடுத்த ஆண்டிமலை ஆகிய பகுதிகளில் கண்டறியப்பட்டிருந்தன. அந்த வரிசையில், தற்போது பூமலை நாகஜுனையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியம் மூன்றாவது முக்கியக் கண்டுபிடிப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
மோரனஅள்ளியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான கண்ணன் என்பவர் முதலில் இந்த ஓவியத்தை கண்டுள்ளார். பின்னர், அவர் இதை பாறை ஓவிய ஆய்வாளரான சதானந்த கிருஷ்ணகுமாரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
அதனைத் தொடர்ந்து, அருங்காட்சியக பாதுகாப்பாட்சியர் சிவக்குமார், பிரகாஷ் மற்றும் அருங்காட்சியகத்தின் முன்னாள் பாதுகாப்பாட்சியர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் இந்த ஓவியத்தின் தன்மை மற்றும் வரலாற்றுப் பின்னணியை ஆய்வு செய்தனர்.
நாகஜுனைப் பாறை ஓவியத்தில் 350-க்கும் அதிகமான குறியீடுகளும், மனிதர் மற்றும் விலங்குகளின் உருவங்களும் இடம்பெற்றுள்ளன. இயற்கையாக அமைந்த சுமார் 10 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்ட குகையின் விதானத்தில், வெண்சாந்து பயன்படுத்தி இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. குகையின் அடிப்பகுதியில் நீர் தேங்கும் வற்றா சுணையும் காணப்படுகிறது.
இந்த ஓவியத் தொகுப்பின் மையப் பகுதியில், நெற்றியில் திரிசூல வடிவம் கொண்ட பெண் தெய்வ உருவமும், இருபுறங்களிலும் அந்தத் தெய்வத்தை நோக்கி நிற்கும் வீரர்களின் உருவங்களும் வரையப்பட்டுள்ளன. இது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ‘பாதீடு’ எனப்படும் காட்சியைக் குறிக்கிறது.
‘பாதீடு’ என்பது வேட்டையில் கிடைத்த விலங்குகளை, தெய்வீகத் தன்மை கொண்ட ஒரு பெண், குழுவில் உள்ள அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வாகும். இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கும் அந்தப் பெண் சங்க இலக்கியங்களில் ‘கொடிச்சி’ என அழைக்கப்படுகிறாள்.
இந்தப் பாறை ஓவியங்களில், சதுர வடிவத்திற்குள் மனித உருவம் மற்றும் வட்ட வடிவத்திற்குள் மனித உருவம் போன்ற குறியீடுகள், இறந்தவர்களை அடக்கம் செய்த கல்திட்டைகள் மற்றும் கல் வட்டங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. தேர் போன்ற அமைப்பினுள் மனித உருவம் காணப்படுவது ‘தேர்ப் பாடை’ எனப்படும் அடக்க முறையை குறிக்கும் அடையாளமாகும். இது மறைந்த வீரன் சொர்க்கத்திற்குச் செல்லும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
இந்த ஓவியங்களில் இடம்பெற்றுள்ள குறியீடுகள், அகழாய்வுகளில் கிடைக்கும் பானை ஓடுகளிலும், சிந்துவெளி நாகரிக முத்திரைகளிலும் காணப்படும் குறியீடுகளுடன் ஒற்றுமை கொண்டுள்ளன. இத்தகைய குறியீடுகளிலிருந்தே தமிழி எழுத்துகள் உருவாகியிருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வுகளுக்கு இந்தப் பாறை ஓவியக் குறியீடுகள் முக்கிய ஆதாரமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.