வறட்சியால் வாடிய 200 கிராமங்களுக்கு புதிய வாழ்வளித்த அதிகாரியின் வியக்கத்தக்க சாதனை
வறட்சியின் தாக்கத்தில் திணறிய 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு புத்துயிர் அளித்து, சுமார் 500 கோடி லிட்டர் மழைநீரை சேமிக்க வழிவகுத்த ஒரு அதிகாரியின் முயற்சி, இன்று நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் நீண்ட காலமாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வந்தன. 2016ஆம் ஆண்டு, வறட்சி காரணமாக ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ஐஆர்எஸ் அதிகாரியான உஜ்வல் குமார் சவ்ஹானின் மனதை ஆழமாக உலுக்கியது.
இதனைத் தொடர்ந்து, “மிஷன் 500” என்ற திட்டத்தை தொடங்கிய அவர், வறட்சியால் பாதிக்கப்பட்ட 200-க்கும் அதிகமான கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பல்வேறு நீர்சேமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
ஒவ்வொரு வார இறுதி நாளிலும் கிராமங்களை நேரில் சென்று சந்தித்த அவர், பயன்பாடின்றி கிடந்த ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாரினால் மீண்டும் நீரை சேமிக்க முடியும் என்ற நம்பிக்கையை பொதுமக்களிடையே விதைத்தார்.
ஆரம்பத்தில் சந்தேகத்துடன் இருந்த மக்கள், அவரது தொடர் முயற்சியும் உறுதியும் காரணமாக ஒன்றிணைந்தனர். அதன் விளைவாக, ஜல்கான் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. மேலும், ஏரிகள் மற்றும் குளங்களில் 500 கோடி லிட்டருக்கு மேற்பட்ட மழைநீர் சேமிக்கப்பட்டுள்ளது.
உஜ்வல் குமார் சவ்ஹானின் இந்த முயற்சியின் பயனாக, விவசாயத்தை கைவிட்டிருந்த பல குடும்பங்கள் மீண்டும் தங்கள் நிலங்களுக்குத் திரும்பி விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.