அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: பொழுதுபோக்கிற்காக மனிதனை கொன்ற இரு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை
வெறும் பொழுதுபோக்கு எண்ணத்தில் ஒரு மனித உயிரை பறித்த இரு இளைஞர்களுக்கு, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2023ஆம் ஆண்டு, கலிபோர்னியாவின் பெல் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறைத் தலைவர் ஆண்ட்ரியாஸ் ப்ராப்ஸ்ட் என்பவரை, ஜீசஸ் அயாலா மற்றும் ஜமீர் கீஸ் ஆகியோர் திருடிய காரை பயன்படுத்தி திட்டமிட்டு மோதச் செய்து கொடூரமாக கொலை செய்தனர்.
இந்தச் சம்பவத்தை அத்துடன் நிறுத்தாமல், நடந்த அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு தங்களின் வக்கிர மனநிலையை வெளிப்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை லாஸ் வேகாஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ஜீசஸ் அயாலா மற்றும் ஜமீர் கீஸ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.