மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்
ஐந்து மாநிலங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தவறான மற்றும் போலி வாக்காளர் பதிவுகளை நீக்கும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு மற்றும் தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா ஆகிய மூன்று மாநிலங்களிலும், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் படி, மேற்கு வங்கத்தில் உயிரிழந்தவர்களாகக் கணக்கிடப்பட்ட 24 லட்சம் பேர், இடம்பெயர்ந்தவர்களாகப் பதிவான 19 லட்சம் பேர் மற்றும் போலி வாக்காளர்களாக கண்டறியப்பட்ட 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் என மொத்தமாக 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் வாக்காளர் படிவங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது